'இவர்கள் எப்படி சமூக நீதி வழங்குவர்'

சென்னை:பட்டியலினத்தை சேர்ந்த, நெல்லை பாப்பாக்குடி தி.மு.க., பஞ்சாயத்து யூனியன் தலைவர், தன் பதவியை ராஜினாமா செய்திருப்பதற்கு, பா.ம.க., தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

திருநெல்வேலிமாவட்டம், பாப்பாக்குடிபஞ்சாயத்து யூனியன் தலைவராக, பட்டியலினத்தை சேர்ந்த பூங்கோதை சசிகுமார் இருந்தார்.

தி.மு.க.,வை சேர்ந்தவர். தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். யூனியன் துணை தலைவராக, தி.மு.க., ஒன்றிய செயலர் மாரிவண்ணமுத்து உள்ளார்.

அவரது ஜாதி ரீதியான அடக்குமுறை மற்றும் அவமதிப்புகளையும் தாங்கிக் கொள்ள முடியாமல், பூங்கோதை பதவி விலகியது அதிர்ச்சி அளிக்கிறது.

யூனியன் சேர்மனாக இருந்த போதும், அவருக்கு நாற்காலி, மேஜை வழங்கப்படவில்லை.அதனால், ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, அவர் பதவி விலகியதாக, அவரது கணவர் சசிகுமார் கூறியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர், துாத்துக்குடி எம்.பி., கனிமொழி ஆகியோரிடம் முறையிட்டும் பலனில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

பட்டியலினத்தை சேர்ந்த,தி.மு.க., சேர்மனுக்கு, அதே கட்சியை சேர்ந்த ஒன்றிய செயலரால் இழைக்கப்படும் சமூக அநீதியை, தி.மு.க.,வால் சரி செய்ய முடியவில்லை. அவர்கள் எப்படி ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் சமூக நீதி வழங்குவர்?

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement