மெரினாவில் இறந்தவர்களின் உடல் உறுப்புகள் 'விஸ்ரா' ஆய்வு

சென்னை:மெரினா விமான சாகசத்தின் போது இறந்தவர்களின் உடல் உறுப்புகள், திசுக்கள், 'விஸ்ரா' என்ற தடயவியல் கூறாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

சென்னை மெரினா கடற்கரையில், 6ம் தேதி விமான சாகச நிகழ்ச்சி நடந்தது.

இதை பார்க்க வந்த, கொருக்குபேட்டையை சேர்ந்த ஜான், 56; பெருங்களத்துாரை சேர்ந்த ஸ்ரீனிவாசன், 54; ஆந்திராவை சேர்ந்த தினேஷ்குமார், 37; திருவொற்றியூரை சேர்ந்த கார்த்திகேயன், 34, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மணி, 37 ஆகியோர் மயக்கமடைந்து உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக, அண்ணாசதுக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மெரினா, ராயப்பேட்டை போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்தவர்களின் உடல்கள் பரிசோதனை, ராஜிவ் காந்தி, ராயப்பேட்டை, ஓமந்துாரார் அரசு மருத்துவமனைகளில் நடந்தது.

அதில், இதய செயலிழப்பு, மாரடைப்பு காரணமாக அவர்கள் உயிரிழந்ததும், அதற்கு வெப்ப வாதம் காரணமாக இருக்க வாய்ப்புள்ளதும் தெரிய வந்தது.

இந்நிலையில், இறந்தவர்களின் உடல் உறுப்புகள் மற்றும் திசுக்களை அமில மாற்றத்துக்கு உள்ளாக்கி சோதனை செய்யும், 'விஸ்ரா' ஆய்வுக்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழப்புக்கான காரணத்தை துல்லியமாக கண்டறிய, சென்னை தடயவியல் துறை இயக்குனரகத்தில், இதற்கான ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement