தேதி குறிச்சாச்சு! அக்.12ல் ஹரியானா முதல்வராக பதவியேற்கிறார் சைனி

1

சண்டிகர்; ஹரியானா முதல்வராக வரும் 12ம் தேதி நயாப் சிங் சைனி பதவியேற்க உள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ஹரியானா சட்டசபை தேர்தலில் பா.ஜ., பெற்று 3வது முறையாக அரியணை ஏறுகிறது. கருத்துக்கணிப்புகளை புறம்தள்ளி பா.ஜ., அமோகமாக வெற்றி பெற்றுள்ளது. அம்மாநிலத்தின் முதல்வராக நயாப் சிங் சைனி வரும் 12ம் தேதி பொறுப்பேற்க உள்ளதாக தெரிகிறது. மாநில தலைவர் மோகன்லால் படோலியுடன் டில்லி வந்துள்ள சைனி பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். அதன் பின்னர் வரும் 12ம் தேதி முதல்வராக பதவி ஏற்கிறார்.


ஹரியானா தேர்தலில் லாத்வா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மேவா சிங்கை 16,054 ஓட்டுகள் வித்தியாசத்தில் நயாப் சிங் சைனி வீழ்த்தினார். தேர்தலுக்கு இரண்டு மாதம் முன்புதான் முதல்வராக இருந்த மனோகர்லால் கட்டாருக்கு பதிலாக நயாப் சிங் சைனி பதவியில் அமர வைக்கப்பட்டார்.


கட்டார் முதல்வராக இருந்த காலத்தில் அவர் மீதான எதிர்ப்பு மற்றும் ஆட்சிக்கு எதிரான மக்களின் மனோநிலையை கருத்தில் கொண்டு முதல்வராக அமர வைக்கப்பட்டவர் நயாப் சிங் சைனி. தேர்தலுக்கு முன்பாக முதல்வராக பதவியில் இருந்த போது மேற்கொண்ட சில நடவடிக்கைகளே வெற்றியை பெற்று தந்திருக்கிறது.


அக்னி வீர் திட்டத்தில் வேலைவாய்ப்பு, தொழில்களுக்கான வாய்ப்புகளை அனுமதிக்கும் வகையிலான கொள்கையை கொண்டு வந்தவர் நயாப் சிங் சைனி. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் அவர் எடுத்த நடவடிக்கைகள் போன்றவையே வெற்றிக்கு காரணமாக இருந்தன. இதனால் நயாப் சிங் சைனியையே மீண்டும் முதல்வராக பதவியில் அமர்த்த பா.ஜ., தலைமை முடிவு எடுத்துள்ளது. கூடிய விரைவில் உரிய அறிவிப்பு வெளியாகும் என்று கட்சி தொண்டர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Advertisement