நியமன எம்.எல்.ஏ.,க்கள் தேவையே இல்லை; கவர்னர் முடிவுக்கு உமர் அப்துல்லா எதிர்ப்பு

6


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு 5 எம்.எல்.ஏக்களை துணை நிலை கவர்னர் சின்ஹா நியமனம் செய்வது தேவையில்லாதது என தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவர் உமர் அப்துல்லா எதிர்ப்பு தெரிவித்தார்.


10 ஆண்டுகளுக்கு பிறகு, ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டு, நேற்று தான் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. சட்டசபையில், துணை நிலை கவர்னருக்கு 5 எம்.எல்.ஏ.,க்களை நியமிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு தேசிய மாநாட்டு கட்சி செயல் தலைவர் உமர் அப்துல்லா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.


'5 எம்.எல்.ஏ.,க்களை நியமனம் செய்ய வேண்டாம்' என மத்திய அரசு மற்றும் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா ​​ஆகியோருக்கு உமர் வேண்டுகோள் விடுத்தார். மேலும் அவர் கூறியதாவது: இது தேவையற்ற அரசியல் மோதலுக்கு வழிவகுக்கும். இதை செய்ய வேண்டாம் என்று நான் பரிந்துரைக்கிறேன். இந்த ஐந்து பேரை நியமிப்பதால் ஆட்சி மாறாது. அதனால் என்ன பயன்? தேவையில்லாமல் ஐந்து பேரை எதிர்க்கட்சியில் உட்கார வைப்பீர்கள்.


சுயேச்சை வேட்பாளர்கள் எங்களுடன் பேசுகிறார்கள். அவர்கள் எங்களுடன் இணைவார்கள், எனவே எங்கள் எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை உயரும். மீறி நடந்தால் சட்டப் போராட்டம் நடத்தப்படும் இதனை எதிர்த்து நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டியிருக்கும் என்பதால் ஒரு சண்டை இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


விதிகளின்படி, சட்டசபைக்கு துணை நிலை கவர்னர் நியமிக்கும் ஐந்து எம்.எல்.ஏ.,க்களும் பா.ஜ.,வைச் சேர்ந்தவராக இருந்தால், அது சட்டசபையின் பலத்தை 95 ஆக உயர்த்தி, அதன் மூலம் பெரும்பான்மையை 46ல் இருந்து 48 ஆக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement