ஜம்மு காஷ்மீரில் கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம் சொல்லும் கணக்கு என்ன?

4


ஸ்ரீநகர்: சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட ஜம்மு - காஷ்மீர் சட்டசபைக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி போட்டியிட்டது. இக்கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது.

அதிக ஓட்டு சதவீதம்




அதிக ஓட்டுகள் பெற்ற தனிப்பெரும் கட்சியாக பா.ஜ., உருவெடுத்துள்ளது. பா.ஜ., சார்பில் 62 வேட்பாளர்கள் (ஜம்முவில் 43 பேர், காஷ்மீரில் 19 பேர்) போட்டியிட்டனர். இதில் மொத்தம் 25.63 சதவீத ஓட்டுகளை பா.ஜ., பெற்றுள்ளது. இவற்றில் ஜம்முவில் மட்டும் 45.4 சதவீத ஓட்டுகளை அள்ளியதுடன் ஓட்டு சதவீதத்தில் பா.ஜ., முதலிடத்தை பிடித்துள்ளது. ஆட்சி அமைக்கவுள்ள தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களை கைப்பற்றியிருந்தாலும், 23.43 சதவீத ஓட்டுகளையே பெற்றுள்ளது. காங்கிரஸ் 11.97 சதவீத ஓட்டுகளை மட்டுமே வாங்கியது.

பகுதி வாரியாக...




பகுதி வாரியாக ஓட்டு சதவீதத்தை கணக்கிடுகையில், காஷ்மீரில் இண்டியா கூட்டணி 42.4 சதவீத ஓட்டுகளையும், பா.ஜ., 2.2 சதவீதமும், மக்கள் ஜனநாயக கட்சி 16.3 சதவீதமும், சுயேட்சைகள் 21.2 சதவீதமும் ஓட்டுகளை பெற்றிருந்தனர். ஜம்முவில் இண்டியா கூட்டணியின் ஓட்டு சதவீதம் குறைந்து 32.8 ஆகவும், பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம் அதிகரித்து 45.2 ஆகவும் பதிவானது.

ஹிந்து - முஸ்லிம்




90 சதவீதத்திற்கும் அதிகமான ஹிந்துக்கள் வசிக்கும் மாவட்டங்களில் பா.ஜ.,வுக்கு தான் அதிக ஓட்டுகள் கிடைத்துள்ளன. அந்த மாவட்டங்களில் பா.ஜ.,வுக்கு 54.3 சதவீதமும், இண்டியா கூட்டணிக்கு 28.4 சதவீதமும் ஓட்டுகள் கிடைத்தன. அதேநேரத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் வசிக்கும் மாவட்டங்களில் இண்டியா கூட்டணிக்கு 41.9 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இங்கு பா.ஜ.,வுக்கு வெறும் 4.1 சதவீதம் மட்டுமே கிடைத்துள்ளன.

Advertisement