'ரூட்டு தல' அக்கப்போருக்கு முடிவு எப்போது; மாணவர்கள் மோதலில் பறிபோனது உயிர்!

9

சென்னை: 'ரூட்டு தல' விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் சென்னை கல்லூரி மாணவர் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



மற்ற மாவட்டங்களை விட கல்லூரி மாணவர்களின் செயல்கள் சென்னையில் எப்போதும் வித்தியாசமானதாகவே இருக்கும். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் 'ரூட்டு தல' விவகாரத்தை சொல்லலாம். குறிப்பிட்ட பஸ்களில், ரயில்களில் பயணிக்கும் கல்லூரி மாணவர்களில் ஒருவர் தலைவராக கொண்டாடப்படுவார்.


அவர் நினைத்தது எல்லாம் நடக்க வேண்டும் என்பது மாணவர்கள் தரப்பில் எழுதப்படாத விதி. இந்த 'ரூட்டு தல' பதவியை கைப்பற்றுவதில் மாணவர்கள் இடையே கடும் போட்டி இருக்கும். சென்னை பஸ்களில், புறநகர் ரயில்களில் கல்லூரி நேரங்களில் மாணவர்களிடையே 'ரூட்டு தல' விவகாரம் அடிதடி என்று மாறி கொலை வரை கூட செல்வதுண்டு.



இந்நிலையில், சென்னையில் இந்த விவகாரத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் கொல்லப்பட்டு உள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு; கடந்த வெள்ளியன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒரு கல்லூரியை சேர்ந்த மாணவர் சுந்தர் என்பவரை மற்றொரு கல்லூரியை சேர்ந்த மாணவர் தரப்பு கடுமையாக தாக்கியது. 'ரூட்டு தல' யார் என்ற பிரச்னையில் இந்த மோதல் எழுந்துள்ளது.


படுகாயம் அடைந்த மாணவர் சுந்தரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், தாக்குதல் நடத்தியதாக மற்றொரு கல்லூரி மாணவர்கள் 5 பேரை கைது செய்தனர்.


இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவர் சுந்தர் இன்று உயிரிழந்தார். மாணவர் மரணத்தை தொடர்ந்து, மாணவர்கள் கல்லூரி வரும் மின்சார ரயில் தடங்களில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர் உயிரிழந்ததால், இந்த சம்பவம் கொலை வழக்காக மாற்றப்பட்டு உள்ளது. மேலும், மாணவர் சுந்தர் படித்து வந்த கல்லூரிக்கு வரும் திங்கட்கிழமை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement