அனைத்து நாடுகளிலும் மத சுதந்திரத்தை கண்காணிப்போம்: சொல்கிறது அமெரிக்கா

1

வாஷிங்டன்: '' அனைத்து நாடுகளிலும் மத சுதந்திரத்திற்கான சூழ்நிலையை கண்காணிப்போம், '' என அமெரிக்கா கூறியுள்ளது.


சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க கமிஷன் (யுஎஸ்சிஐஆர்எப்), இந்தியாவில் மத சுதந்திரம் மோசம் அடைந்து வருவதாக கூறியதுடன், குறிப்பிடத்தக்க கவலை கொள்ள வேண்டிய நாடு என பட்டியலிட வேண்டும் எனக்கூறியிருந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்த அறிக்கை இந்தியா குறித்து பொய் தகவல்களை கூறுவதுடன், கட்டுக்கதைகளை ஊக்குவிக்கிறது. இதுபோன்ற அறிக்கைகளை தயாரிப்பதை விட்டுவிட்டு அமெரிக்காவிற்குள் நடக்கும் மனித உரிமை பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும் எனக்கூறியிருந்தது.


இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாத்யூ மில்லர் கூறியதாவது: யுஎஸ்சிஐஆர்எப் அறிக்கையை நாங்கள் பார்த்தோம். இது சுதந்திரமான அமைப்பு. சம்பந்தப்பட்ட அமைப்புகள் மற்றும் பார்லிமென்டிற்கு கொள்கை பரிந்துரைகளை அளிக்கிறது. அந்த அமைப்பானது வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அங்கம் அல்ல.

கடந்த டிசம்பர் மாதம், அமெரிக்க வெளியுறவு அமைச்சர், குறிப்பிடத்தக்க கவலை கொள்ள வேண்டிய பட்டியலில் இந்தியாவை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை எனக்கூறியிருந்தார். ஆனால், இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் மத சுதந்திர சூழ்நிலையை உன்னிப்பாக கவனிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement