ஜம்மு - காஷ்மீர் தேர்தல்: பா.ஜ., காங்.,-ல் யாருக்கு ஏற்றம்? யாருக்கு ஏமாற்றம்?

9


ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் சட்டசபைக்கு 10 ஆண்டுகளுக்கு பின் சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. நேற்று (அக்.,9) நடந்த ஓட்டு எண்ணிக்கையில் தேசிய மாநாட்டு கட்சி (42) - காங்கிரஸ் (6) கூட்டணி 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இண்டியா கூட்டணியில் இடம்பெற்ற மற்றொரு கட்சியான கம்யூனிஸ்ட் ஒரு இடத்தில் வென்றது. மொத்தத்தில் இண்டியா கூட்டணி 49 இடங்களை கைப்பற்றியது. பா.ஜ., 29 இடங்களிலும், மக்கள் ஜனநாயக கட்சி 3 இடங்களிலும் வென்றன.

2014 - 2024 ஒப்பீடு




2014ல் நடந்த தேர்தலில் இண்டியா கூட்டணி 28 இடங்களையும் (தே.மா.கட்சி - 15, காங்கிரஸ் -12, கம்யூ., - 1), பா.ஜ., 25 இடங்களையும் கைப்பற்றியிருந்தது. அந்த வகையில் 2014 சட்டசபை தேர்தலைவிட காங்கிரஸின் வளர்ச்சி பாதியாக குறைந்தது. அதாவது 2014ல் 12 இடங்களில் வென்றிருந்த காங்கிரஸ், தற்போது 6 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. தேசிய மாநாட்டு கட்சி 15ல் இருந்து 42 ஆக தன் கணக்கை உயர்த்தியுள்ளது. பா.ஜ.,வை பொறுத்தவரை 25 ஆக இருந்த தங்கள் எம்எல்ஏ.,க்களின் எண்ணிக்கையை சற்றும் குறையாமல் 29 ஆக மாற்றியுள்ளது.

பகுதி வாரியாக...




பகுதி வாரியாக பிரித்து பார்க்கையில், காஷ்மீரை உள்ளடக்கிய பகுதிகளில் 47 தொகுதிகளும், ஜம்முவை உள்ளடக்கிய பகுதிகளில் 43 தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன. இதில் காஷ்மீரில் இண்டியா கூட்டணி 41 இடங்களையும், மக்கள் ஜனநாயக கூட்டணி 3 இடங்களையும் கைப்பற்றின. அங்கு 19 தொகுதிகளில் மட்டுமே பா.ஜ., போட்டியிட்ட நிலையில், ஒருவர் கூட வெற்றிப்பெறவில்லை. அதுவே, ஜம்முவின் அனைத்து தொகுதிகளிலும் களமிறங்கிய பா.ஜ., 29 இடங்களை வென்றது. அங்கு இண்டியா கூட்டணிக்கு 8 இடங்களே கிடைத்தது.

இந்த புள்ளிவிபரங்களை பார்க்கையில் ஜம்மு - காஷ்மீர் தேர்தல் காங்கிரசின் தோல்வியாகவே கருதப்படுகிறது. குறிப்பாக பகுதி வாரியாக ஜம்முவின் அனைத்து தொகுதிகளையும் குறி வைத்த பா.ஜ.,வின் திட்டத்திற்கு பெருமளவு பலன் கிடைத்துள்ளது. இண்டியா கூட்டணிக்கு காஷ்மீர் பகுதி மட்டுமே அதிக இடங்களை கொடுத்து ஆட்சியமைக்க கைகொடுத்துள்ளது.

Advertisement