'ரூட் தல' சண்டையில் சென்னை மாணவர் கொலை

சென்னை:'ரூட் தல' விவகாரத்தில் நடந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த சென்னை மாநிலக் கல்லுாரி மாணவர் சுந்தர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இத்தாக்குதலில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் ஐந்து பேர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள பல்வேறு கல்லுாரிகளில், 'ரூட் தல' என்ற பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

ஒவ்வொரு பகுதிக்கும் தங்களை தலைவராக அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பும் மாணவர்கள், தங்கள் அணியில் மற்ற மாணவர்களை சேர்த்து கொண்டு வலம் வருவதும், எதிர் கோஷ்டியினர் மீது தாக்குதல் நடத்துவதும் தொடர்கிறது. தற்போது, முதல் முறையாக கொலை வரை இப்பிரச்னை சென்றுள்ளது.

பெரும்பாலும், எதிர்கோஷ்டியினர் மீது தாக்குதல் நடப்பது வழக்கம் என்ற நிலையில், வேறொரு கல்லுாரியின் அடையாள அட்டையை அணிந்து வந்தார் என்பதற்காகவே தாக்குதல் நடத்தியது, போலீசார் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எந்த பிரச்னையிலும் தொடர்பு இல்லாத மாணவர் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, பொன்பாடியைச் சேர்ந்தவர் சுந்தர் 19. மாநிலக் கல்லுாரியில், அரசியல் அறிவியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

அக்., 4 மாலை கல்லுாரி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக, சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் நோக்கி நடந்து சென்றார்.

அப்போது, பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் ஐந்து பேர், அவரை வழிமறித்து, 'ஏன் கல்லுாரி அடையாள அட்டையை அணிந்து வருகிறாய்' என கேட்டு சுந்தரை சரமாரியாக தாக்கி தப்பினர்.

இதில் படுகாயமடைந்த சுந்தரை ரயில்வே போலீசார் மீட்டு, ஆம்புலன்சில் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். திருமுல்லைவாயலைச் சேர்ந்த பச்சையப்பன் கல்லுாரி மாணவர் ஈஸ்வர்,20, திருவள்ளூர் ஹரிபிரசாத், 20, கமலேஷ்வரன், 20, யுவராஜ், 20, ஆல்பர்ட், 20,ஆகிய ஐந்து பேர் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. கொலை முயற்சி வழக்கில், ஐந்து பேரை பெரியமேடு போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், தங்களை பெரிய ஆட்கள் என காட்டிக்கொள்வதற்காக, கொலை வெறி தாக்குதலில் மாணவர்கள் ஈடுபட்டது தெரிய வந்தது.

மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த சுந்தர், நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, கொலை முயற்சி வழக்கை, கொலைவழக்காக போலீசார் மாற்றினர்.

கல்லுாரிகளுக்கு விடுமுறை



சுந்தர் உயிரிழந்ததை அடுத்து, இரு கல்லுாரிகளுக்கும் நேற்று முதல் ஆறு நாட்கள்,விடுமுறை விடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இருப்பினும், மாநிலக் கல்லுாரி வளாகத்தில் சில மாணவர்கள், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள், 'மாணவர் சுந்தர் உயிரிழப்பிற்கு, பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் 15 பேர் காரணம். இதுவரை ஐந்து பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும்' என, கோரிக்கை விடுத்தனர். அவர்களுடன், கல்லுாரி நிர்வாகமும், போலீசாரும் சமரச பேச்சு நடத்தினர்.

உயிரிழந்த மாணவனின் சகோதரி தமிழ்ச்செல்வி கூறியதாவது:

கல்லுாரிக்கு சேர்ந்த சிலவாரங்களே ஆன நிலையில், சுந்தரை அடித்துக் கொன்றுவிட்டனர். கல்லுாரி மாணவன் என்பதற்கு அடையாள அட்டை தான் முக்கியம். அடையாள அட்டை அணிந்து சென்றதை குற்றம் என்பதைபோல, பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் என் சகோதரர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி கொன்றுவிட்டனர். சகோதரன் உயிரிழப்பிறகு நியாயம் கிடைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement