குடிநீரை வீணாக்கினால் ரூ.1000 அபராதம்; : நகராட்சி தலைவர் எச்சரிக்கை தவறு தொடர்ந்தால் இணைப்பு துண்டிக்க முடிவு

கம்பம்: கம்பத்தில் குடிநீரை வீணாக்கினால் முதல் முறை ரூ. ௧000 அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி தலைவர் வனிதா தெரிவித்துள்ளார்.

கம்பம் நகராட்சிக்கு லோயர் கேம்ப் பம்பிங் ஸ்டேஷன், சுருளிப்பட்டி ரோடு பம்பிங் ஸ்டேஷனில் இருந்தும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. நகரில் 18 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் உள்ளது. இவற்றிற்கு 24 மணி நேரமும் இரு பம்பிங் ஸ்டேசன்களில் இருந்தும் 1 கோடியே 43 லட்சம் லிட்டர் குடிநீர் தினமும் பம்பிங் செய்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் சப்ளை நடக்கிறது.

மாதந்தோறும் குடிநீர் பம்பிங் செய்ய ரூ.12 லட்சம் மின்கட்டணம் ஆகிறது. பராமரிப்பு செலவு, பணியாளர் சம்பள செலவுகள் உள்ளது. இவ்வளவு செலவு செய்து தேவைக்கு அதிகமாக குடிநீர் சப்ளை செய்வதால், பொதுமக்கள் குடிநீரை பாத்ரூம், கழிப்பறை, துணி துவைத்தல் உள்ளிட்ட இதர தேவைகளுக்கும் பயன்படுத்துகின்றனர். சில இடங்களில் சாக்கடைகளில் குடிநீர் வீணாக்குவது, குழாயை திறந்த படியே விட்டு விடுவது உள்ளிட்ட பல வழிகளில் குடிநீர் வீணாகி வருகிறது. மாநிலம் முழுவதும் பரவலாக உள்ள இப்புகார் எழுந்துள்ளதால் கண்டிப்பான நடவடிக்கைகள் எடுக்க நகராட்சிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

கம்பம் நகராட்சி தலைவர் வனிதா கூறுகையில், குடிநீரை பிடித்த பின் சரியாக குழாய்களை மூடாமல் விடுவதால் வீதிகளிலும், சாக்கடைகளிலும் குடிநீர் வீணாகி வருகிறது. குடிநீரை வீணாக்குபவர்களை கண்டறிந்து முதல் முறை எச்சரிக்கையுடன் ரூ.ஆயிரமும், இரண்டாவது முறை அதே தவறு தொடர்ந்தால் ரூ.3 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்படும். அதே நபர் மூன்றாவது முறையாக அந்த தவறை செய்தால், குடிநீர் இணைப்பை துண்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது .

பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக செலவுசெய்ய வேண்டும். என்றார். கமிஷனர் வாசுதேவன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement