இமானுவேல் சேகரன் பிறந்த நாள் விழா

பரமக்குடி : பரமக்குடியில் சுதந்திர போராட்ட வீரர் இமானுவேல் சேகரன் 100-வது பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.


கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், கயல்விழி, டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன் முன்னிலை வகித்தனர். இமானுவேல் சேகரன் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.


தமிழக அரசு சார்பில் ரூ.3 கோடியில் பரமக்குடி சந்தை அருகில் இமானுவேல் சேகரன் முழு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது.

விழாவில் உணவு பொருள்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் 276 பேருக்கு புதிய ரேஷன் கார்டு, ஆதி திராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 346 பேருக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.51.90 லட்சம் மதிப்பில் இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.

எம்.பி., நவாஸ்கனி, எம்.எல்.ஏ.,க்கள் காதர் பாட்ஷா, முருகேசன், தமிழரசி, சண்முகையா, சப்-கலெக்டர் அபிலாஷா கவுர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசைவீரன், நகராட்சி தலைவர் கருணாநிதி, துணை தலைவர் குணா, இமானுவேல் சேகரன் மகள் பிரபாராணி கலந்து கொண்டனர். இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement