நல்லா விளையாடுறாங்க...; கடைகளாக மாறிய இளைஞர் விளையாட்டு விடுதி

மதுரை: மதுரை ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள மத்திய அரசின் இளைஞர் விடுதி நிரந்தரமாக பூட்டப்பட்டுள்ளதால் வாசல் பகுதி கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்குட்பட்ட மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இருந்து 10ஆயிரம் சதுர அடி இடம் மத்திய அரசின் இளைஞர் விடுதி கட்ட ஒதுக்கப்பட்டது. 1987 ல் 5000 சதுரஅடியில் கட்டடம் கட்டப்பட்டு 80 முதல் 100 பேர் 'டார்மெட்ரி' முறையில் தங்கும் அறைகள் கட்டப்பட்டன.

ஒரு அறையில் அதிகபட்சம் 15 பேர் தங்கலாம். குடிநீர், கழிப்பறை வசதிகளுடன் வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு 1999 வரை தினசரி ரூ.80 ஆக குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு விடப்பட்டது. குறிப்பாக வெளியூரில் இருந்து குழுவாக வரும் விளையாட்டு வீரர்கள் இந்த விடுதியால் பயன்பெற்றனர். அதன் பின் பராமரிப்பின்றி கட்டடத்தில் ஆங்காங்கே நீர்க்கசிவு ஏற்பட்டது. குடிநீரின்றி இளையோர் விடுதி மூடப்பட்டது.

ஐந்தாண்டுகளாக மூடியிருப்பதால் கட்டடத்தின் காம்பவுண்ட் தரைப்பகுதி முழுவதும் புதர் மண்டியது. வெறும் கம்பிவலை மட்டுமே தடுப்பாக இருப்பதால் இளைஞர் விடுதியில் இருந்து மழைக்காலத்தில் ரேஸ்கோர்ஸ் மைதானத்திற்குள் பாம்புகள் படையெடுக்கின்றன. தற்போது விடுதியின் முன்புற கேட்டையொட்டி பெட்டி கடைகள் நிரந்தரமாக வைக்கப்பட்டுஉள்ளன. விடுதி வாசலிலேயே குப்பையை கொட்டியும் வேண்டாத பொருட்களை அடுக்கியும் வைத்துள்ளனர்.

மத்தியஅரசின் நேரு யுவகேந்திரா மூலம் மத்திய பொதுப்பணித்துறையிடம் இருந்து பராமரிப்பு செய்வதற்காக ரூ.99 லட்சத்திற்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இதில் மத்திய அரசு ரூ.20 லட்சம் வழங்க உள்ளதாகவும் மீதி ரூ.79 லட்சம் தொகையை தமிழக அரசு செலுத்த வேண்டுமென இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை செயலருக்கு கடந்த ஜனவரியில் கடிதம் அனுப்பப்பட்டது.

இன்றைக்கு பலகோடி ரூபாய் பெறுமானமுள்ள இந்த கட்டடம் மத்திய, மாநில அரசுகளின் இழுபறியால் பரிதாப நிலையில் உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் இருந்து நிலம் பெறப்பட்டு கட்டடம் கட்டப்பட்டதால் மீண்டும் ஆணையம் இந்த இடத்தையும் கட்டடத்தையும் தன்வசமாக்க வேண்டும். தற்போது ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாநில போட்டிகள் நடத்தும் போது வீரர், வீராங்கனைகள் தங்குவதற்கு விளையாட்டு விடுதி இல்லாததால் இளையோர் விடுதியை பராமரித்து நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும்.

Advertisement