--ஜல்லி கற்களுடன் ரோடு, குவிக்கப்பட்டுள்ள குப்பை-- அவதியில் ராஜபாளையம் நகராட்சி 40வது வார்டு மக்கள்

ராஜபாளையம், : ஓடை துார்வாராதது, குடியிருப்பு அருகே குப்பை குவியல், நாய்கள் தொல்லை என மக்கள் தீர்வினை எதிர்பார்க்கின்றனர்.

ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 40 வது வார்டில் பாரதி நகர், பி.எஸ்.கே நகர், கணபதியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் வசிக்கின்றனர். ரயில்வே பாலம் சத்திரப்பட்டி ரோடு தொடக்கம் அருகே தனியார் பள்ளி சுற்றுச்சுவர் அருகே தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமித்துள்ளது.

பி.எஸ்.கே., நகர் கணபதியாபுரம் இடையே உள்ள ரயில்வே பகுதி குப்பை பாயிண்டாக மாற்றப்பட்டு துர்நாற்றம், தீ வைப்பினால் சுவாசக் கோளாறு பிரச்னை ஏற்படுகிறது.

பிரதான ஓடையில் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து, மண் மேவி கழிவுநீர் தேங்கி நிற்கின்றன. கணபதியாபுரம் தெரு பணிகள் நடைபெறாமல் மாணவர்கள், தொழிலாளர்கள், மக்கள் பாதிக்கின்றனர்.

நகராட்சி கவுன்சிலர் இடம் காலியாக உள்ளதால் குறைகள் கேட்க ஆள் இல்லை. குடியிருப்பு பகுதியில் தெரு நாய்கள் அதிகரித்து இரவு நேரம் விரட்டுகிறது.

கண்காணிப்பு வேண்டும்



கணேஷ் குமார், குடியிருப்பாளர்: இந்த வார்டுக்கு உட்பட்ட பி.எஸ்.கே., நகர் பாரதி நகரில் அடிக்கடி திருட்டு கொள்ளை சம்பவம் தொடர்கதையாக உள்ளது. நகரின் கிழக்கு மேற்கு குடியிருப்புக்கு இணைப்பு பகுதியாக உள்ளதால் ஏராளமான புதிய நபர்கள் நடமாட்டம் அதிகம். போலீசாரின் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும்.

கொசு தொல்லை அதிகம்



முத்துக்குமார், குடியிருப்பாளர்: ரோடு பணிகள் நடந்த இடத்தில் குடிநீர் கசிவு பாதாள சாக்கடை அடைப்புக்காக மீண்டும் ஆங்காங்கே தோண்டி விட்டுள்ளனர். இதில் கிளம்பும் மண் மாறுகால்களில் விழுந்து அடைப்பு ஏற்படுகிறது. இதனால் கொசு தொல்லை அதிகமாகி சிக்கலுக்கு உள்ளாகிறோம்.

5 வருடங்களாக அவதி



செந்தில்குமார், குடியிருப்பாளர்: ரயில்வே மேம்பாலம் ஒட்டியுள்ள கணபதியாபுரத்தில் குடியிருப்புகளுக்கு செல்லும் மெயின் ரோடு ஐந்து வருடங்களாக மேடு பள்ளங்களுடன் காணப்படுகிறது. இடையில் ஜல்லி கற்கள் மட்டும் போட்டு பாதியில் விட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் குடியிருப்போர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக வேண்டி உள்ளது.

நடவடிக்கை எடுக்கப்படும்



பவித்ரா, நகராட்சி தலைவர்: பி.எஸ்.கே. நகர் குடியிருப்பு அருகே பல்வேறு பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் குப்பைகளை கொட்டி செல்வதை கண்காணிக்கப்படும். கணபதியாபுரம் தெரு ரயில்வே சம்பந்தப்பட்ட இடம் உள்ளதால் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். திருக்கண் போடப்பட்ட ரோடு குடிநீர் கசிவுகளுக்காக தோண்டப்பட்ட பின் செப்பனிடப்படும். குறைகள் நிவர்த்தி செய்யப்படும்.

Advertisement