ஊத்துக்கோட்டையில் 2,500 மணல் மூட்டைகள் தயார்

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை நீர்வள ஆதார துறை பராமரிப்பில் முறைப்படுத்தப்பட்ட, 15 ஏரிகள், முறைப்படுத்தப்படாத, 52 ஏரிகள் என மொத்தம், 67 ஏரிகள் உள்ளன. இதில், சுருட்டப்பள்ளி அணைக்கட்டில் இருந்து நீர்வரத்து கால்வாய் வாயிலாக, தண்ணீர் பெறும் ஊத்துக்கோட்டை, பேரண்டூர், லட்சிவாக்கம், பாலவாக்கம் உள்ளிட்ட முறைப்படுத்தப்பட்ட, 15 ஏரிகள் உள்ளன.

எல்லாபுரம், பூண்டி ஒன்றியங்களில், 52 ஏரிகள் உள்ளன. சில தினங்களாக பெய்து வரும் மழையால் மேற்கண்ட ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி மழை பெய்யும் நிலையில், நீர்வரத்து அதிகரித்து ஏரிகள் நிரம்பும் நிலை ஏற்படும். அதிகளவு நீர் வந்தால் ஏரிகளில் பலமில்லாத இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறும் அபாயம் ஏற்படும்.

இதுபோன்ற சமயங்களில் மணல் மூட்டை வைத்து அடைக்கும் பணியை நீர்வள ஆதார துறை அதிகாரிகள் மேற்கொள்வர். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, ஊத்துக்கோட்டை நீர்வள ஆதார துறை அலுவலக வளாகத்தில், 2,500 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

Advertisement