ராமநாதபுரத்தில்  1128 நீர் நிலைகளை துார்வாரி.மண் எடுப்பு: இவ்வாண்டு அதிக மழைநீரை சேமிக்க முடிவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சிதுறை கட்டுப்பாட்டில் உள்ள 1128 நீர்நிலைகளில் 3 லட்சம் கனமீட்டர் மண் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இவ்வாண்டு அதிக மழை நீரை சேமிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கீழ் 641 கண்மாய்கள், ஊரகவளர்ச்சி துறையில் 1122 சிறுபாசன கண்மாய்கள், 3897 ஊருணிகள் என 5660 நீர்நிலைகள் உள்ளன. இவ்வாண்டு பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 1128 நீர்நிலைகளை துார்வாருவதற்கு விவசாயிகள், மண் பாண்டபம் செய்யும் தொழிலாளர்களுக்கு புவியியல் சுரங்கத்துறை வழிகாட்டுதலின் படி வருவாய்துறையினர் அனுமதி அளிக்கப்பட்டது.

இதன்படி ஜூலை 8ல் துவங்கி அக்.15 வரை மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மண்பண்ட தொழிலாளர்கள் இல்லை. விவசாயிகள் 3350 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் தகுதியுள்ள 2077 பேருக்கு கண்மாய், ஊருணியை துார்வார அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

புவியியல் சுரங்கத்துறை வழிகாட்டுதலின் படி 3 அடி ஆழம் வரை மண் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாவட்டத்தில் இதுவரை 3 லட்சம் கன மீட்டர் மண் எடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் அளவிற்கு அதிகமாக மண் எடுப்பதாக புகார் வந்தது.

அவ்விடங்களில் கனிமவளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அனுமதியை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் ஊருணி, கண்மாய்களில் அதிகளவில் மழைநீரை தேக்க முடியும் என வருவாய்துறை அதிகாரிகள் கூறினர்.

---

Advertisement