வழவழப்பான சாலையால் விபத்து கிராம மக்கள் மறியல் செய்ய முயற்சி

செஞ்சி: செஞ்சி அருகே களையூரில் சாலை வழவழப்பாக இருப்பதால் விபத்துகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு நிலவியது.

செஞ்சி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் களையூர் கூட்ரோடு பஸ் நிறுத்தம் அருகே ஏரி வாய்க்கால் பாலம் உள்ளது. இந்த பாலத்தில் இருந்து இரண்டு பக்கமும் 200 மீட்டர் துாரத்திற்கு சாலை வழவழப்பாக போடப்பட்டுள்ளது.

சிறு மழை பெய்தால் கூட பஸ், லாரி, கார், இரு சக்கர வாகனங்கள் இந்த இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துகள் ஏற்படுகிறது. கடந்த ஒரு ஆண்டில் அதே இடத்தில் 30க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளது.

கடந்த மாதம் 20ம் தேதி இரவு சென்னையில் இருந்து 60க்கும் மேற்பட்ட பயணிகளுடன் திருவண்ணாமலை சென்ற அரசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தை அடுத்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பயணிகள் அதிஷ்ட வசமாக உயிர் தப்பினர். மறுநாள் அதே இடத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதியதில் விவசாயி இறந்தார்.

சாலையை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என களையூர் கிராம மக்கள் பல முறை நகாய் அதிகரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.

நேற்று மதியம் 1:00 மணியளவில் சென்னையில் இருந்து மளிகை பொருட்களுடன் திருவண்ணாமலை சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து பள்ளித்தில் இறங்கியது.

இதனால், ஆத்திரமடைந்த களையூர் கிராம மக்கள் டிராக்டர்களை சாலையின் குறுக்கே நிறுத்தி சாலை மறியல் செய்ய முயன்றனர்.

தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.

Advertisement