பூக்கள் விலை இரு மடங்கு உயர்வு

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஆயுதபூஜையையொட்டி நேற்று பூக்களின் விலை இரு மடங்காக உயர்ந்தது.

ஆயுதபூஜை இன்று கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து நாளை விஜயதசமி கொண்டாட உள்ள நிலையில், அதற்கான பூஜை பொருள்களான அவல், பொறி, பழங்கள், பூ, அலங்கார தோரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.

விழுப்புரம் மார்க்கெட் வீதியான காந்தி வீதி, பாகர்ஷா வீதி, நேருஜி சாலை பகுதிகளில், நேற்று காலை 10:00 மணி முதல் பூஜை பொருட்கள் விற்பனை சூடுபிடித்தது.

பூஜை பொருட்களை வாங்க ஏராளமான மக்கள் திரண்டதால், நேருஜி சாலையில், நேற்று பிற்பகல் 3:00 மணி முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஒரு மூட்டை பொரி 450 முதல் 500 ரூபாய்க்கும், ஒரு கிலோ அவல் ஒரு கிலோ 65 ரூபாய், பொட்டுக்கடலை 115 ரூபாய்க்கும் விற்பனையானது.

விழுப்பரம் நகரின் முக்கிய வீதிகளிலும், ஆயுத பூஜைக்கான பொருட்கள், பூக்கள், வாழை கன்றுகள், அலங்கார தோரணங்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டிருந்தது. குண்டுமல்லி கிலோ 1,000 ரூபாய், கனகாம்பரம் 900 ரூபாய், முல்லை 800 ரூபாய், சாமந்தி 120 ரூபாய், அரளி 450 ரூபாய், சம்பங்கி 450 ரூபாய்க்கும் விற்பனையானது. தொடர் மழை மற்றும் பண்டிகை காரணமாக பூக்களின விலை இருமடங்கு உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement