உலக பெண் குழந்தைகள் தினம் 'காபி வித் கலெக்டர்' கலந்துரையாடல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் உலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 'காபி வித் கலெக்டர்' என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

அக்., 11ம் தேதி உலக பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, பள்ளியில் பயிலும் பெண் குழந்தைகளை ஊக்குவித்து, அவர்களின் எதிர்காலம் குறித்து கலந்துரையாடும் வகையில் 'காபி வித் கலெக்டர்' என்ற நிகழ்ச்சி கள்ளக்குறிச்சியில் நடந்தது.

கலெக்டர் பிரசாந்த் பேசியதாவது:

சுமாராக படித்த யாரும் வாழ்வில் தோற்பதில்லை. நானும் கல்வியில் தோல்விகளை சந்தித்துள்ளேன், ஆனால், துவண்டு விடவில்லை. விடாமுயற்சியுடன் தொடர்ந்து படித்ததால் வாழ்வில் வெற்றி பெற்றுள்ளேன்.

நீங்களும் விடாமுயற்சியுடன் படித்து, வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும். பெண் குழந்தைகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள அனைத்து சட்டங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஆண், பெண் இருவரும் சமம். அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. யு.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., ஆர்.ஆர்.பி., டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட போட்டி தேர்வுகளில் ஆண்களை விட பெண்கள் அதிகம் தேர்ச்சி பெறுகின்றனர்' என்றார்.

தொடந்து கலெக்டர் மாணவிகளின் சந்தேகங்களுக்கு பதிலளித்து, பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா உட்பட பலர் உடனிருந்தனர்.

நிறைவேற்றிய கலெக்டர்

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மீட்டிங் ஹாலில் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, க.அலம்பளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவி ஜனனி மற்றும் மற்றொரு மாணவி உங்களது இருக்கையில் அமர வேண்டும் என கலெக்டரிடம் விருப்பம் தெரிவித்தனர். உடன் கலெக்டர் இருக்கையில் இருந்து, இரு மாணவிகளையும் தனி, தனியாக அழைத்து இருக்கையில் அமரவைத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். தொடர்ந்து, கேக் வெட்டப்பட்டது.

Advertisement