யோகி ஆதித்யநாத் Vs அகிலேஷ் யாதவ்; போர்க்களமானது லக்னோ!

3

லக்னோ: சுதந்திர போராட்ட வீரர்களை பா.ஜ., அவமதிப்பதாகவும், ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஜெயந்தி விழாவையொட்டி, லக்னோவில் உள்ளசர்வதேச மையத்தில் (ஜே.பி.என்.ஐ.சி., ) உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்த சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் திட்டமிட்டிருந்தார். ஆனால், அந்த மையத்திற்குள் யாரும் நுழைய முடியாதபடி, தகர சீட்டுக்களால் மூடி மறைக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த அகிலேஷ் யாதவ், நேற்று இரவு சம்பவ இடத்திற்கு நேரில் சென்றார். அவருடன் நூற்றுக்கணக்கான சமாஜ்வாதி கட்சியினரும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


இதனால், போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், பா.ஜ.,வுக்கும், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் எதிராக கட்சியினர் கோஷங்களை எழுப்பினர். மேலும், அங்கு தடுப்புக்காக வைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகளின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த இடமே போர்க்களம் போல காட்சி அளித்தது.
இதையடுத்து அசம்பாவிதம் தவிர்க்க, அகிலேஷ் வீடு, சமாஜ்வாதி கட்சி அலுவலகம், முக்கிய சாலை சந்திப்புகள், ஜே.பி.சர்வதேச மையம் ஆகிய இடங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


அப்போது, பேசிய அகிலேஷ் யாதவ், தகர சீட்டுகளை வைத்து நிறுத்தி பா.ஜ., அரசு எதையோ மறைக்க நினைப்பதாகவும், ஜே.பி.என்.ஐ.சி., சமத்துவத்தின் அடையாளம் என்றும் கூறினார்.
மேலும், இந்த மையத்தை விற்பதற்கோ அல்லது யாருக்கோ கொடுப்பதற்கோ தயாராகி இருப்பதாகவும், சுதந்திர போராட்ட வீரர்களை பா.ஜ., அவமதிப்பதாகக் கூறி அவர், ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளார்.


இதனிடையே, அகிலேஷ் யாதவின் வருகையையொட்டி, பாதுகாப்பு நடவடிக்கையாக இதுபோன்று தடுப்புகள் அமைக்கப்பட்டதாக லக்னோ மேம்பாட்டு துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

அதேவேளையில், அகிலேஷ் யாதவின் இந்த செயல் குழந்தைத் தனமானது என்றும், 'சமாஜ்வாதி கட்சி பியூஸ் போன டிரான்ஸ்பார்மர்' என்றும் பா.ஜ., விமர்சனம் செய்துள்ளது.
கடந்தாண்டும் இதேபோன்று ஜெயப்பிரகாஷ் நாராயணன் பிறந்த நாளுக்கு மரியாதை செலுத்த விடாமல் தடுத்து விட்டதாக, பா.ஜ., அரசு மீது சமாஜ்வாதி கட்சியினர் குற்றம் சாட்டினர்.

Advertisement