ரங்கோலியில் ரத்தன் டாடா... மெட்ரோ ஸ்டேஷனில் அஞ்சலி

பெங்களூரூ: பெங்களூரூவின் மெஜஸ்டிக் மெட்ரோ ஸ்டேஷனில் ரங்கோலி மூலம் ரத்தன் டாடாவின் உருவத்தை வரைந்திருப்பது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.



பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, 86, உடல்நலக்குறைவால் கடந்த 9ம் தேதி இரவு காலமானார். பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு, துப்பாக்கிக் குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் அவரது உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது.


பொதுசேவைக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ரத்தன் டாடாவின் இழப்பு பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி கடற்கரையில் ரத்தன் டாடாவுக்கு மணற் சிற்பம் வரைந்து, பிரபல சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் இரங்கல் தெரிவித்துள்ளார்.


டாடாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, பெங்களூரின் மெஜஸ்டிக் மெட்ரோ ஸ்டேஷனில் ரங்கோலி மூலம் ரத்தன் டாடாவின் உருவத்தை வரைந்து, பிரபல ரங்கோலி கலைஞர் அக்ஷய் ஜலிஹால் மரியாதை செலுத்தியுள்ளார். அந்த ரங்கோலியில் நீல நிற உடையில் இருக்கும் ரத்தன் டாடாவின் பின்புறம், ஒரு படிகட்டில் அவர் (ஆத்மா) ஏறிச் செல்வது போன்று தத்ரூபமாக வரையப்பட்டுள்ளது. இது பார்ப்போரை கவர்ந்துள்ளது.

Advertisement