சூதாட்ட செயலி மூலம் ரூ.5 ஆயிரம் கோடி மோசடி; தலைமறைவு நபர் துபாயில் கைது!

5


துபாய்: மகாதேவ் சூதாட்ட செயலி மூலம், 5,000 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு துபாயில் பதுங்கி இருந்த சவுரப் சந்திராகர், இன்டர்போல் உதவியுடன் கைது செய்யப்பட்டார்.


வட மாநிலங்களில், 'மகாதேவ்' என்ற ஆன்லைன் சூதாட்ட செயலியில் சேர்ந்த லட்சக்கணக்கானோர், தங்கள் பணத்தை இழந்துள்ளனர். இது குறித்து புகார்கள் எழுந்ததை அடுத்து, விசாரணையை முடுக்கிய அமலாக்கத் துறை, கடந்த மாதம் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது.


மும்பை, கோல்கட்டா, போபால் உட்பட, 39 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. பல மாநிலங்களில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. செயலியின் செயல்பாடுகள் குறித்து, அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வந்தனர்.



இந்நிலையில், முக்கிய குற்றவாளி துபாயில் பதுங்கி இருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இன்று(அக்.,11) சவுரப் சந்திராகர் என்பவர், இன்டர்போல் உதவியுடன் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவிற்கு அழைத்து வந்து விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.



இவர் சட்டவிரோத பந்தயம் மற்றும் சூதாட்ட இணையதளங்கள் மூமல் மக்களை ஏமாற்றி, ரூ.5 ஆயிரம் கோடி மோசடி செய்துள்ளார் என்பது அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஒரு வாரத்திற்குள் சந்திராகர் இந்தியா அழைத்து வரப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement