ஐ.நா., படை மீது இஸ்ரேல் தாக்குதல்; வீரர்களை அனுப்பிய இந்தியா கவலை!

5


புதுடில்லி : லெபனானில் ஐ.நா., படைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், அங்கு அமைதிப்படையில் பணியாற்றும் இந்திய வீரர்களின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு கவலை தெரிவித்து உள்ளது.


உலகின் உள்நாட்டு கலவரம் நடக்கும் இடங்களில் பாதுகாப்பு பணியில் ஐ.நா., பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு உள்ளனர். அதில் இந்திய ராணுவ வீரர்கள் ஏராளமானோர் பணியாற்றுகின்றனர். அதில் சிறப்பாக பணியாற்றிய ராணுவ வீரர்களுக்கு ஐ.நா., விருது வழங்கி கவுரவித்து உள்ளது. லெபனானில் மட்டும் 600 இந்திய வீரர்கள் அமைதிப்படையில் பணியாற்றுகின்றனர்.


ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேல் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. தெற்கு லெபனானில் உள்ள ஐ.நா., இடைக்காலப் படை தலைமையகம் மற்றும் ஐ.நா., அமைதிப்படை நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் அமைதிப்படை வீரர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக ஐ.நா., கூறியிருந்தது.


இது தொடர்பாக நமது வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: லெபனானில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவது குறித்து கவலைப்படுகிறோம். தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஐ.நா., அமைப்பு மற்றும் அதன் இடங்களை மதிக்க வேண்டும். ஐ.நா., அமைதிப்படையினர் மற்றும் அவர்களின் பணியின் புனிதத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

Advertisement