ரூ.30 லட்சம் மோசடி செய்தவர் திடீர் நெஞ்சு வலியால் 'அட்மிட்'

சென்னை, சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர் சுதாகர், 33; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். புற்றுநோயால் அவதிப்படும் தன் தாய்க்கு, சென்னை தி.நகர் சீனிவாச ரெட்டி சாலையில் உள்ள, ேஹாமியோபதி மருத்துவர் விவாகர், 49, என்பவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அப்போது, சுதாகரிடம், 'ேஹாமியோபதி மருத்துவத்துடன், இறால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலும் செய்து வருகிறேன்.

'இந்த தொழிலில் முதலீடு செய்யும் தொகைக்கு, 10 சதவீதம் வட்டி தருகிறேன்' என, விவாகர் கூறியுள்ளார். இதை நம்பி சுதாகர், 5 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். இந்த பணத்திற்கான வட்டியும், முதலையும் விவாகர் கொடுத்துவிட்டார். பின், தொழிலை விரிவுப்படுத்த வேண்டும் என, 30 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். இந்த பணத்தை தராமல், விவாகர் மோசடி செய்துள்ளார். இதுகுறித்து சுதாகர், தி.நகர் துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விவாகரை நேற்று, காவல் நிலையம் அழைத்து வந்தனர். அப்போது அவர், திடீரென நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார். இதனால், ராமாபுரம் அருகே உள்ள, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு, ஏற்கனவே கிட்னி மாற்று அறுவை சிகிச்சை மற்றும் பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Advertisement