நம்புங்க மக்களே... சஹாரா பாலைவனத்தில் வெள்ளம்! 50 ஆண்டுகளில் இல்லாத அதிசயம்

1

சஹாரா: சஹாரா பாலைவனத்தில் 50 ஆண்டுக்கு பின்னர் அங்குள்ள ஏரி ஒன்று நிரம்பி உள்ளது, ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருக்கிறது.



சஹாரா என்றால் இதை படிப்பவர்களுக்கு கூட நினைவுக்கு வருவது வறட்சி, வெயில், மணல்பரப்பு போன்றவை தான். மொராக்கோ நாட்டில் இருக்கும் இந்த பாலைவனத்தில் உள்ள ஏரி ஒன்றில் தண்ணீர் நிரம்பி இருக்கும் விவரம் வெளியாகி இருக்கிறது.

அந்த ஏரியின் பெயர் இரிக்கி. 50 ஆண்டுகளாக வற்றியிருந்த ஏரி தற்போது நீர் நிரம்பி காணப்படுகிறது. சராசரியாக ஓராண்டில் பெய்ய வேண்டிய மழையை விட கூடுதலாக ஓரிருநாளில் கொட்டிய கனமழையே இதற்கு காரணம் என்று தெரிகிறது.

பாலைவனத்தில் தேங்கிய வெள்ள நீர், ஆங்காங்கே குட்டைகளாக காட்சி அளிக்கும் படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை ஆச்சரியப்படுத்தி உள்ளன. நாசாவால் எடுக்கப்பட்ட படங்களும் வெளியாகி காண்போரை கவர்ந்துள்ளன.

இதுகுறித்த மொராக்கோ நாட்டு வானிலை மைய நிபுணர்கள் கூறியதாவது: முன் எப்போதும் இல்லாத ஒன்று. பருவகால மாறுபாட்டால் ஏற்பட்டு இருக்கலாம். கடந்த 50 ஆண்டுகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தது இல்லை. மிக குறுகிய காலத்தில் இப்போதுதான் நடந்திருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

Advertisement