விளையாட்டுச் செய்திகள் முதல்வர் கோப்பை விளையாட்டு சென்னை வீரர்கள் தொடர் ஆதிக்கம்

சென்னை:மாவட்டங்களுக்கு இடையிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில், சென்னை மாவட்டம் பதக்க பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

தமிழக முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் பள்ளி, கல்லுாரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் நடக்கின்றன.

இதில் தடகளம், நீச்சல் உள்ளிட்ட மொத்தம் 36 விளையாட்டுகளில், மாவட்ட அளவிலான இறுதிச் சுற்றுக்கு 33,000 வீரர்கள் தேர்வாகினர்.

இந்நிலையில், கடந்த 4ம் தேதி முதல், இறுதிச் சுற்று போட்டிகள் துவங்கின.

துவங்கிய நாள் முதல், நேற்று முன்தினம் வரை, சென்னை மாவட்ட அணி பதக்க பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இதில், மதுரையில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான கோ கோ போட்டியில் சென்னை, கோவை, ஈரோடு மாவட்ட அணிகள் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றன.

மாணவியருக்கான போட்டியில், சிவகங்கை மாவட்ட அணி தங்கமும், கிருஷ்ணகிரி மாவட்ட அணி வெள்ளியும், கன்னியாகுமரி மாவட்ட அணி வெண்கலமும் வென்றன.

சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த பள்ளி மாணவியர், 57 கிலோ எடை பிரிவு ஜூடோ போட்டியில், சென்னை வீராங்கனையர் தில்ரூபா, கிருத்திகா, தாரா ஸ்ரீ முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் என, மூன்று பதக்கங்களையும் வென்று அசத்தினர்.

நேற்று முன்தினம் வரையிலான போட்டிகளில் சென்னை மாவட்ட அணி 20 தங்கம், 10 வெள்ளி, 16 வெண்கலம் என, மொத்தம் 46 பதக்கங்களை வென்று, தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

சேலம் மாவட்ட அணி 7 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்திலும், 7 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலம் என, மொத்தம் 17 பதக்கங்களுடன் ஈரோடு மாவட்ட அணி மூன்றாம் இடத்திலும் உள்ளன.

போட்டிகள், வரும் 24ம் தேதி முடிவடைகின்றன.

Advertisement