தினமலர் சார்பில் மதுரை இம்மையில் நன்மை தருவார் கோயிலில் மழலையர்களுக்கான ‛அரிச்சுவடி ஆரம்பம்' நிகழ்ச்சி

மதுரை: தினமலர் மாணவர் பதிப்பு மற்றும் மஹன்யாஸ் சார்பில் ‛அ னா… ஆ வன்னா' அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி, மதுரையில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் நேற்று நடந்தது.

தலைமை அர்ச்சகர் தர்மராஜ சிவம் மழலையர்களுக்கான அரிச்சுவடி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அவர் பேசியதாவது:

சிவன் தன்னைத்தானே பூஜித்த கோயில் இது. பிள்ளைகள் எழுதப்பழகும் முதல் நாள் விஜயதசமி. மண்ணுக்குரிய இத்தலத்தில் விஜயதசமி நாளில் பச்சரிசியில் மழலையர்களின் ஆட்காட்டி விரல் பிடித்து தமிழ் உயிரெழுத்தாகிய அ, ஆ, ஓம் எழுத்துகளை பெற்றோர் எழுதச் செய்தனர். பள்ளிக்கு அனுப்பும் முன்பாக கோயிலில் இந்த நிகழ்வை செய்வது சிறப்பு. வித்தை ஆரம்பிக்கும் இந்நாளில் எழுதத்துவங்கினால் மாணவர்கள் கல்வியறிவில் சிறந்து விளங்குவர் என்றார்.

கோயில் கண்காணிப்பாளர் வேலுசாமி உடனிருந்தார்.

குழந்தைகளின் தளிர் விரல் பிடித்து எழுதிய சந்தோஷங்களை இளம்பெண்கள் பகிர்ந்து கொண்டனர்.

இது பு து அனுபவம்



ஸ்வேதா, காந்தி நகர்

அக்கா அனுஷாவின் குழந்தை அக் ஷராவை என் மடியில் வைத்து விரல் பிடித்து எழுத கற்றுத் தந்தேன். எல்லா குழந்தைகளுடன் சேர்ந்து அமர்ந்து எழுத வைத்தது புது அனுபவமாக இருந்தது.

பள்ளிக்கு முன்பாக கோயில்



மதுமிதா, ஜெய்ஹிந்துபுரம்

குழந்தை பிரதிக் ஷா ஸ்ரீக்கு 3 வயதாகிறது. விஜயதசமி நாளில் பள்ளியில் சேர்க்க ஏற்பாடு செய்துள்ளோம். அதற்கு முன்பாக தினமலர் ஏற்பாடு செய்த விஜயதசமியில் பங்கேற்பதற்காக கோயிலுக்கு வந்தோம். குழந்தை விரல் பிடித்து எழுதிய போது பரவசமாக இருந்தது.

தினமலர் எங்களுக்காக செய்துள்ளது



நந்தினி, ஆனையூர்

எங்களுக்கு விஜயதசமி அரிச்சுவடி விழா நடத்தவில்லை என்றாலும் உறவினர்கள் நிறைய பேர் செய்த போது எங்கள் குழந்தை ரிதுஷ்னிக்கும் அரிச்சுவடி விழா நடத்த நினைத்தோம். தினமலர் எங்களுக்காக செய்துள்ளது. நல்லது நடக்க வேண்டும் என்றால் இந்த கோயிலுக்கு தான் வருவேன். எனவே என் குழந்தையின் கல்வி துவக்கமாக வந்தது மகிழ்ச்சி.

மறக்க முடியாத அனுபவம்



ரஞ்சனி, அய்யர்பங்களா:

மாமியார் பத்மா தான் தினமலர் பார்த்து எங்களுக்காக பதிவு செய்திருந்தார். நேர்மறை சிந்தனைகள் அதிகம் உள்ள இடம் கோயில். மகன் ஆதிசேஷ்க்கு கோயிலில் அரிச்சுவடி நடத்தியது மனத்திருப்தியாக உள்ளது. எல்லா குழந்தைகளுடன் சேர்ந்து மகனுடன் ‛அ' எழுதியது வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்.

சன்னிதானத்தில் கிடைத்த வாய்ப்பு



ஆராதனா, பரவை

கூட்டு வழிபாடு, பிரார்த்தனையின் போது பிரபஞ்சத்தின் சக்தி எல்லோருக்கும் கிடைக்கும். அனைத்து குழந்தைகளும் நாளை நல்ல தலைமுறையாக வளர்வதற்கு கோயிலில் தினமலர் மூலம் நல் வாய்ப்பு கிடைத்துள்ளது. எங்கள் மித்ரா பாப்பாவுக்கு தெய்வ சன்னிதானத்தில் வைத்து ‛அ' எழுத வைத்துள்ளோம். இந்த சிறப்பு வேறெங்கும் கிடைக்காது.

ஐதராபாத் - மதுரை பயணம்



சஷ்டி கிருத்திகா, திருநகர்

பெற்றோர், மாமியார் வீடு மதுரையில் உள்ளது. நாங்கள் ஐதராபாத்தில் வசிக்கிறோம். யாழ்மொழிக்கு இரண்டரை வயதாகிறது. தமிழ்மொழியை மதுரைக்கு வந்து கற்றுத்தர ஆசைப்பட்டோம். மாமனார் சோமசுந்தரம் தினமலர் படித்து தகவல் சொன்னார். எங்கள் ஆசையை நிறைவேற்றி வைத்த தினமலர் நாளிதழுக்கு நன்றி.

இவ்வாறு கூறினர்.

காலை 8:50 முதல் மதியம் 12:00 மணி வரை ஏழு பிரிவுகளாக 1050 குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடந்தது. சில்வர் தட்டு, பச்சரிசி, தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, இனிப்பு, காரம், பால், நோட்டு, பென்சில், ஷார்ப்னர் இலவசமாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை அம்மன் உயர்தர சைவ உணவகம், ஆனந்தா அண்ட் ஆனந்தா, ஸ்ரீ நர்சிங் ஸ்வீட்ஸ் லிட்., பி.ஜி.நாயுடு ஸ்வீட்ஸ், சீமா நோட் புக்ஸ் இணைந்து வழங்கின.

Advertisement