ஆளை விடுங்க சாமி... மூடா விவகாரத்தில் பின்வாங்கிய கார்கே!

8

பெங்களூரூ: கர்நாடகாவில் மூடா வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தனது குடும்பத்தினர் நிர்வகிக்கும் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட நிலத்தை திருப்பி வழங்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முடிவு செய்துள்ளார்.


'மூடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில், பயனாளிகளுக்கு வீட்டு மனை ஒதுக்கியதில் 4,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. முதல்வர் சித்தராமையா தன் அதிகாரத்தை பயன்படுத்தி, மனைவி பார்வதிக்கு மைசூரின் முக்கிய இடமான விஜயநகரில் 14 வீட்டுமனைகள் வாங்கிக் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.


மூடா வழக்கு விசாரணையை எதிர்த்து சித்தராமையா தொடர்ந்த வழக்கை கர்நாடகா ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இது அம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு பெரும் சிக்கலை உண்டாக்கியது. இருப்பினும், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து வரும் சித்தராமையா, மனைவிக்கு ஒதுக்கிய இடத்தை திருப்பி கொடுக்க முடிவு செய்துள்ளார்.


இந்த விவகாரம் சூடுபிடித்ததை உணர்ந்த காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தனது குடும்பத்தினர் நடத்தி வரும் சித்தர்த்தா விஹார் அறக்கட்டளைக்கு, மூடா சார்பில் ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தை திருப்பிக் கொடுக்க முடிவு செய்துள்ளார்.


கடந்த மார்ச் மாதம் பட்டியலின இடஒதுக்கீட்டின் அடிப்படையில் சித்தர்த்தா விஹார் அறக்கட்டளைக்கு, 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீடு சட்டவிரோதம் என்றும், அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி என்பவர் கவர்னரிடம் புகார் அளித்தார்.


மேலும், இது தொடர்பாக கர்நாடகா தொழில்துறை அமைச்சர் எம்.பி., பாட்டீலிடம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என லோக் ஆயுக்தாவில் சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் எம்.பி., பாட்டீல், சித்தர்த்தா விஹார் அறக்கட்டளைக்கு நிலம் ஒதுக்கியதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement