சஞ்சுவின் மிகப்பெரிய ரசிகர் கம்பீர்... பழைய பதிவை பகிர்ந்து ரகசியதைத் உடைத்த முன்னாள் வீரர்

புதுடில்லி: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கம்பீர், இந்திய வீரர் சாம்சனின் மிகப்பெரிய ரசிகர் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.




வங்கதேசத்திற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. நேற்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில், 297 ரன்னை குவித்து சரித்திரம் படைத்தது. இந்த ரன் குவிப்பிற்கு சஞ்சு சாம்சன் 40 பந்துகளில் சதம் அடித்து முக்கிய பங்காற்றினார். ரிஷாத் ஹொசைன் வீசிய 10 ஓவரில் 5 சிக்சர்களை அடித்து அமர்க்களப்படுத்தினார்.


மேலும், அதிவேகமாக சதமடித்த 2வது இந்திய கிரிக்கெட் வீரர் என்றும், டி20 கிரிக்கெட்டில் முதல் சதமடித்த இந்திய விக்கெட் கீப்பர் உள்ளிட்ட சாதனைகளையும் சஞ்சு சாம்சன் படைத்துள்ளார்.


கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் கிடைத்த வாய்ப்புகளில் சொதப்பி வந்த சஞ்சு சாம்சன், இந்த சதத்தின் மூலம், தானொரு சிறந்த பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்துள்ளார்.


இந்த நிலையில், தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கடந்த 2020ல் சஞ்சு சாம்சன் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதாவது, சஞ்சு சாம்சன் இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இல்லை என்றும், ஆனால், சிறந்த இளம் பேட்டர் என்று குறிப்பிட்டிருந்தார்.


கம்பீரின் இந்தப் பதிவை சுட்டிக்காட்டிய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா சில தகவல்களை பகிர்ந்துள்ளார். ஒருமுறை சஞ்சு சாம்சனை இன்டர்வ்யூ எடுக்கும் போது, கவுதம் கம்பீரை டுவிட் செய்ய வைப்பதே உங்களின் வாழ்க்கையின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று கூறியதாகவும், இதற்காக அவர் காத்திருந்தாகவும் தெரிவித்துள்ளார்.


மேலும், கம்பீர் தற்போதும் சஞ்சு சாம்சனின் ரசிகர் தான் என்றும், ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெயிக்வாட் போன்ற வீரர்களுக்கு கிடைத்த வாய்ப்புகளைப் போல சாம்சனுக்கு கிடைக்க வில்லை என்று கூறிய ஆகாஷ் சோப்ரா, தனக்கு கிடைத்த வாய்ப்பில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதாக பாராட்டியுள்ளார்.

Advertisement