ட்ரெய்னிங் போதாதோ? ராவண வதம் நிகழ்ச்சியில் வில்லுடன் அம்பையும் தூக்கி போட்ட முதல்வர்

1

பாட்னா: பாட்னாவில் நடைபெற்ற ராவண வதம் நிகழ்ச்சியில் அம்பை எய்வதற்கு பதிலாக, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வில்லுடன், அம்பையும் தூக்கி போட்ட வீடியோ வைரலாகி இருக்கிறது.



நவராத்திரி விழா எனப்படும் தசரா பண்டிகை வட மாநிலங்களில் பிரசித்தம். தீமையை அழித்து நன்மையை குறிக்கும் ஒரு அம்சமாக பார்க்கப்படுகிறது. வட மாநிலங்களில் கொண்டாடப்படும் இந்த விழாவின் போது ராவணனின் உருவ பொம்மையை தீயிட்டு எரிப்பதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந் நிலையில், பீகார் மாநிலம் பாட்னாவில் தசரா விழாவை முன்னிட்டு ராவண வதம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 80 அடி உயரத்தில் ராவணன் சிலை அங்கே அமைக்கப்பட்டு இருந்தது. அந்த ராவணன் சிலையை அம்பு எய்து வதம் செய்ய வேண்டும்.

அதற்காக அமைக்கப்பட்ட ஒரு மேடையில் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் விஜய்குமார் சிங்கா, சபாநாயகர் நந்த்கிஷோர் யாதவ் உள்ளிட்ட பலர் நின்று கொண்டிருந்தனர். அனைவர் கையிலும் வில், அம்பு தரப்பட்டு இருந்தது.

பார்வையாளர்கள் பலத்த கரவொலி எழுப்ப, மேடையில் இருந்த அனைவரும் தங்கள் கைகளில் இருந்த அம்பை வில்லில் பூட்டி எய்துவிட தயாராக இருந்தனர். மற்றவர்கள் ரெடியாக நாணில் வில்லை பூட்ட, முதல்வர் நிதிஷ்குமார் மட்டும் வில்லில் அம்பை பூட்டாமல் அப்படியே வைத்திருந்தார். அங்குள்ள ஒலிபெருக்கியில் ஒருவர் அறிவிப்பு வெளியானது.

அடுத்த கணமே மேடையில் இருந்தவர்கள் ரெடியாக, ஒரு கட்டத்தில் மிகவும் ஆர்வமுடன் காணப்பட்ட நிதிஷ்குமார், அம்பை விடுவதற்கு பதில் கையில் இருந்து வில், அம்பு இரண்டையும் தூக்கி போட்டார். அடடா... அவசரப்பட்டுவிட்டோமோ என்று எண்ணி மற்றவர்களை பார்க்க, அவர்கள் கையில் இருந்த வில்லில் அம்பை பூட்டி ராவணனை நோக்கி எய்தனர். அதன் பின்னர், நிகழ்ச்சி களை கட்டியது.

அம்பை எய்ய தயாரான நேரத்தில் குறி தவறி விட்டதே என்று நிதிஷ் குமார் யோசிக்கும் அந்த தருணமும், நிகழ்ச்சியின் வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.

Advertisement