லோக்சபா மாதிரியே சட்டசபை தேர்தலிலும் வெற்றி: சரத்பவார் திட்டவட்டம்!

6

புதுடில்லி: மஹாராஷ்டிரா மாநிலத்தில், கடந்த லோக்சபா தேர்தலில் மகா விகாஸ் அகாடி கூட்டணி வெற்றி பெற்றது போல, மாநில சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என என்.சி.பி. (சரத்பவார்) அணியின் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.



தேசியவாத காங்கிரஸ் (அஜித்பவார்) அணியை சேர்ந்த பாபா சித்திக் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார். இது பெரும் மஹாராஷ்டிரா அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து, டில்லியில் மஹா விகாஸ் அகாடி கூட்டணியை சேர்ந்த, சிவசேனா(உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் தலைவர் நானா படோலி மற்றும் என்.சி.பி. (சரத்பவார்) சரத்பவார் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

பின்னர் சரத்பவார் கூறுகையில், "மஹாராஷ்டிராவில் தற்போதுள்ள மகாயுதி கூட்டணி அரசு நிர்வாகம் சீர்குலைந்து விட்டது. தற்போதைய அரசிடமிருந்து மக்களை விடுவிக்க வேண்டும், மக்கள் எங்களுக்குத்தான் ஆதரவளிப்பார்கள்.


பன்ஜரா சமூகத்திற்கு காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை என பிரதமர் மோடி, சொல்லி வருகிறார். வசந்த்ராவ் நாயக், மாநில முதல்வராக பணியாற்றினார். பா.ஜ., தான் எதுவும் செய்யவில்லை.


மகா விகாஸ் அகாடி கூட்டணி, லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றது போல், வரும் சட்டசபை தேர்தலிலும் வெற்றிபெறும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரே கூறுகையில், "சமீபத்தில் நடந்த ஹரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ., விற்கு இடையே ஓட்டு வித்தியாசம் சிறு வித்தியாசமே இருந்தது. இந்நிலையில் தான் பா.ஜ., கூடுதல் சீட்களை பெற்று ஆட்சி அமைத்தது. மகாயுதி கூட்டணி முதல்வர் வேட்பாளர் யார் என அறிவித்தால், மகா விகாஸ் அகாடி கூட்டணியும் அறிவிக்கும்," இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.


காங்கிரஸ் தலைவர் நானா படோலி கூறுகையில், "பிரதமர் பேசும் அரசியல் பேச்சுக்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார். எங்களது அடிப்படை நோக்கம், தற்போதுள்ள அரசை தோற்கடிக்க வேண்டும், முதல்வர் வேட்பாளர் யார் என்பது இப்போது முக்கியமில்லை," என சரத்பவார், படோலி இருவரும் கூட்டாக தெரிவித்தனர்.

Advertisement