ஆலோசனை கோரும் நேரடி வரித்துறை

வருமான வரித்துறை சட்டம் சீரமைப்பு தொடர்பான ஆலோசனைகளை பொதுமக்கள் இணையதளம் வாயிலாக வழங்கலாம் என நேரடி வரிகளுக்கான மத்திய வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்திய வருமான வரிச்சட்டம் 1961, வருமான வரி உள்ளிட்ட வற்றுக்கான அடிப்படை சட்டமாக விளங்குகிறது. வருமான வரி சட்டம் எளிமையாக அமையும் மற்றும் வரி செலுத்துபவர்கள் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் இந்த சட்டம் சீரமைக்கப்படும் என பொது பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.

வருமான வரிச்சட்டத்தை மேலும் எளிமையாக்கி, தெளிவை அதிகமாக்க இந்த சீரமைப்பு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், சீரமைப்பிற்கான நடவடிக்கைகளை நேரடி வரிகளுக்கான மத்திய வாரியம் மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சீரமைப்பு தொடர்பாக பொதுமக்களும் ஆலோசனை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி செலுத்துவதற்கான இணையதளத்தில் பதிவு செய்து கொண்டு ஆலோசனை வழங்கலாம். சட்ட மொழியை எளிமையாக்குவது, வழக்கு நடவடிக்கைகளை குறைப்பது, விதிகளை பின்பற்றும் செயல்முறை, தேவையற்ற விதிகளை நீக்குவது ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் ஆலோசனைகளை வழங்கலாம்.

Advertisement