ரூ.9 லட்சம் கேட்டு மிரட்டிய டுபாக்கூர் அதிகாரிகள் கைது

வடக்கு கடற்கரை:மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் கவுஷர் பாய்; சவுகார்பேட்டையில் சொந்தமாக நகை பட்டறை நடத்தி வருகிறார்.

இவரது கடைக்கு வந்த ஐவர் கும்பல், தங்களை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் என அறிமுகம் செய்து, நகை கடையை சோதனை செய்ய வேண்டுமென கூறியுள்ளனர்.

அவர் சோதனைக்கு அனுமதித்த நிலையில், திடீரென அந்த கும்பல், தாங்கள் வழக்கறிஞர்கள் எனக் கூறி, 9 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் தராவிட்டால், நகை பட்டறை நடத்த முடியாது என்றும் மிரட்டியுள்ளனர்.

வழக்கறிஞர் அடையாள அட்டையை காட்டும்படி கவுஷர் பாய் கேட்ட போது, சட்ட கல்லுாரி மாணவர்கள் எனக்கூறி சமாளித்துள்ளனர்.

சந்தேகமடைந்த கவுஷர் பாய், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

சிறிது நேரத்தில் வந்த யானைக்கவுனி போலீசார், ஐவரில் மூவரை மடக்கிப் பிடித்தனர். அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

இதில் அவர்கள், எம்.கே.பி.நகரைச் சேர்ந்த வஜகத் அலி, 30, முகமது ஆசிப், 21, மற்றும் ஜாபர் சாதிக் அலி, 34, என தெரிந்தது. ஜாபர் சாதிக் அலி மீது, ஹிந்து அமைப்பு தலைவர்களை மிரட்டிய வழக்கு உள்ளது.

கோவையில் பயங்கரவாத செயலில் ஈடுபட முயன்ற வழக்கிலும், என்.ஐ.ஏ.,வால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது ஜாமினில் வெளியே வந்த இவர், கூட்டாளிகளுடன் சேர்ந்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டது தெரிந்தது.

இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்த போலீசார், தப்பிய இருவரை தேடி வருகின்றனர்.

Advertisement