உள்ளே பளபள... வெளியே 'பொலபொல' வாடிக்கையாளருக்கு ரூ.50,000 இழப்பீடு

சென்னை:வீட்டில் உள் அலங்காரப் பணியை, தரமின்றி செய்த தனியார் நிறுவனம், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு, 50,000 ரூபாய் இழப்பீடாக வழங்க, சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த தம்பதி ஆனந்த்குமார், வளர்மதி தாக்கல் செய்த மனு:

சென்னை துரைப்பாக்கம், 200 அடி ரேடியல் சாலையில், 'ரேடியன்ஸ் மாண்டரின்' என்ற அடுக்குமாடி குடியிருப்பில், 2022 ஆக., 3ல் வீடு வாங்கினோம்.

வீட்டில் உள் அலங்காரம் செய்ய துரைப்பாக்கம், 'குக் ஸ்கேப்' என்ற நிறுவனத்தை அணுகினோம். 'உள் அலங்காரப் பணிகளுக்கு, 10 ஆண்டுகள் வரை உத்தரவாதமும், சான்றிதழும் வழங்குவோம்' என்றனர்.

இதை நம்பி, மரத்தால் ஆன உள் அலங்காரப் பணியை, 8.96 லட்சம் ரூபாயில் செய்ய, நிறுவனத்துக்கு ஒப்புதல் வழங்கினோம். கட்டணத்தையும் செலுத்தினோம். இரண்டு வாரத்தில் பணிகளை முடிப்பதாக உறுதி அளித்தனர்.

ஆனால், தரமற்ற மரங்களைக் கொண்டு, அலமாரிகள், 'டிவி' யூனிட், பூஜை யூனிட் ஆகியவற்றை செய்தனர். இரண்டு வாரத்தில் பணிகளை முடிக்காமல், பாதியில் விட்டுவிட்டனர். இதுகுறித்து, பலமுறை மின்னஞ்சல் அனுப்பியும் உரிய பதிலை நிறுவனம் அளிக்கவில்லை.

எனவே, பணிகளை நிறைவு செய்து தரவும், மன உளைச்சல், சேவை குறைபாடுக்காக, 2 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கவும், நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த, சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் பி.ஜிஜா, உறுப்பினர்கள் டி.ஆர்.சிவகுமார், எஸ்.நந்தகோபாலன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:

உள் அலங்காரப் பணிக்கு முழு தொகையையும் செலுத்திய பின்னும், பணியை மேற்கொண்ட நிறுவனம், தரமற்ற மரத்தால் பணிகளை செய்துள்ளது.

மேலும், திட்டமிட்ட நேரத்தில் பணிகளை முடிக்காமல் அலைக்கழித்துள்ளது. மனுதாரர்கள் தரப்பில் அனுப்பிய நோட்டீசை வாங்க, அந்நிறுவனம் மறுத்துள்ளது. இந்த நடவடிக்கை சேவை குறைபாடு மட்டுமின்றி, கவனக்குறைவாகவும் செயல்பட்டுள்ளது.

எனவே, மனுதாரர்களின் வீட்டில் அரைகுறையாக நிற்கும் பணிகளை, நிறுவனம் முடித்து தர வேண்டும். அதுமட்டுமின்றி, சேவை குறைபாடுக்கு, 50,000 ரூபாய் இழப்பீடாகவும், வழக்கு செலவுக்காக, 5,000 ரூபாயும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement