வாய்க்காலை மூடி குழாய் அமைப்பு ஏரி நீர் பாசனம் பாதிக்கும் என எதிர்ப்பு

மணலி:கடப்பாக்கம் ஏரியில் இருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் வாய்க்காலை மூடி, குழாய் அமைக்கும் பணிக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், 16 வது வார்டில், கடப்பாக்கம் ஏரி உள்ளது. வடக்கே விச்சூர், கிழக்கே கண்ணியம்மன்பேட்டை விவசாய நிலங்கள், தெற்கே அரியலுார் ஏரி, மேற்கே விவசாய நிலங்கள் என, 149 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ளது. .

செம்பியம் மணலி ஏரி நிரம்பும் பட்சத்தில், வாய்க்கால் வழியாக, 2.1 கி.மீ., துாரத்திற்கு உபரி நீர் பயணித்து, கடபாக்கம் ஏரிக்கும் வரும். தவிர, சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மழைநீர் வரத்தும் இருக்கும்.

ஏரி நிரம்பும் பட்சத்தில், தெற்கே கலங்கல் வழியாக வெளியேறி, அரியலுார் ஏரிக்கு செல்லும்.

வடக்கே கலங்கல் வழியாக வெளியேறி, ராஜாங்கால் ஓடையில், 1.8 கி.மீ., துாரம் பயணித்து, கொசஸ்தலை இணைப்பு கால்வாயில் வெளியேறும்.

கடப்பாக்கம் ஏரியில், 0.25 டி.எம்.சி., தண்ணீர் தேங்குகிறது. புனரமைப்பு பணிக்கு பின், 0.50 டி.எம்.சி., தண்ணீர் தேக்க முடியும்.

கடப்பாக்கம் ஏரியில் இருந்து, சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள், நீர்பாசனம் பெறுகின்றனர்.

ஏரி நிரம்பியிருக்கும் போது, ஏரியின் கிழக்கு பக்கம், ஏரிக்குள் இருக்கும் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேறி, பாதாள வழியாக தார் சாலையை கடந்து, சிறு ஓடைகள் மூலம், விவசாய நிலங்களுக்கு செல்லும்.

ஏரியில் தண்ணீர் குறைவாக இருக்கும் போது, மின்மோட்டர்கள் வழியாக, நீர் இறைக்கப்பட்டு, மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு, ஓடைக்கு கடத்தப்படும். இதற்கென ஏரிக்குள் நான்கு இடங்களில், மதகுகள் மற்றும் மின்மோட்டர்கள் உள்ளன.

இந்நிலையில், விராதி கடலியம்மன் கோவில் அருகேயுள்ள, விவசாய நிலங்களை தனியார் நிறுவனம் வாங்கியுள்ளது. அந்த இடத்தில் தற்போது, கட்டட இடிபாடுகளை கொட்டி நிரவும் பணிகள் நடக்கின்றன.

இதனிடையே, அந்த இடத்தில் ஏரியில் இருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லும், 300 அடி நீள கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் உருளை வடிவிலான குழாய்களை பொருத்தி விட்டு, முழுவதும் நிரவி வருகின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:

இந்த இடத்தை தாண்டியும், 300 ஏக்கர் பரபரப்பளவிலான நிலத்தில் விவசாயம் நடந்து வருகிறது. அதற்கான ஏரிநீர் பாசனம் இந்த வழியாக தான் சென்றாக வேண்டும். இந்நிலையில், தனியார் நிறுவனம் குழாய் பொருத்தி விட்டால், அதில் அடைப்பு ஏற்படும் பட்சத்தில், சரி செய்வதில் சிக்கல் ஏற்படும்.

மேலும், நிறுவனம் மதில் சுவர் எழுப்பி விட்டால், அந்த குழாயை பராமரிக்கவும், விவசாயிகள் கண்காணிக்கவும் முடியாது. இதனால், நீர்பாசனம் தடைபடும் போதெல்லாம் பிரச்னை ஏற்படும்.

அதற்கு மாற்றாக, தனியார் நிறுவனம் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, அந்த வாய்க்காலை திறந்தவெளி கால்வாயாகவே விட வேண்டும். நிறுவனம் பயன்பாட்டிற்கு, இரு நிலங்களையும் இணைக்கும் பொருட்டு ஆங்காங்கே, கல்வெட்டுகள் அமைத்துக் கொள்ளட்டும்.

ஆனால், குழாய் பொருத்தினால் நீர் பாசனத்தில் பிரச்னை ஏற்படும்.

இவ்வாறு விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


திறந்தவெளி கால்வாய்



ஏரியில் இருந்து, விவசாய நிலங்களுக்கு செல்லும் வாய்க்காலை மூடி குழாய் அமைத்தால், பிரச்னை ஏற்படும். நிறுவனம், மதில்சுவர் அமைத்து விட்டால், குழாயில் அடைப்பு ஏற்பட்டால் சரி செய்வதில் சிக்கல் ஏற்படும். எனவே, தற்போது இருப்பது போலவே, திறந்தவெளி கால்வாயாகவே இருக்க வேண்டும். மீறி குழாய் அமைத்தால், நீர் பாசனம் பெற முடியாது. 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கும்.கே. சங்கர், 72, கண்ணியம்மன் பேட்டை, மணலி

Advertisement