வைப்பு நிதி முதலீடு மேற்கொள்ள ஏற்ற தருணம்

குறுகிய, நடுத்தர கால நோக்கில் வைப்பு நிதி முதலீட்டை நாட திட்டமிட்டுள்ளவர்கள், தற்போதைய நிலையில் முதலீடு செய்வது ஏற்றது.

வைப்பு நிதிக்கான வட்டி விகித போக்கை கவனித்து வரும் முதலீட்டாளர்கள் தீர்மான மான முடிவெடுக்க வேண்டிய நிலை வந்துவிட்டதாக வல்லுனர்கள் கருதுகின்றனர். ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை மாற்றி அமைக்காத நிலையிலும், வரும் மாதங்களில் வட்டி விகித குறைப்பு நிகழலாம் என்பதை முதலீட்டாளர்கள் மனதில் கொண்டு செயல்பட வேண்டும் என்கின்றனர்.

சர்வதேச வட்டி விகித போக்கிற்கு ஏற்ப ரிசர்வ் வங்கியும் செயல்பட வேண்டியிருக்கும் என விளக்கம் அளிக்கின்றனர். இந்த பின்னணியில் அதிக வட்டி விகிதத்தில் வைப்பு நிதி முதலீடு மேற்கொள்ளும் வாய்ப்பு தற்போது நிலவுவதாகவும் கருதுகின்றனர்.

வட்டி விகிதம்



மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அண்மையில், அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்தது. வட்டி விகித போக்கில் மாற்றத்தின் அடையாளமாக இது கருதப்படுகிறது.

அமெரிக்க மத்திய வங்கியைத் தொடர்ந்து மற்ற நாட்டு மத்திய வங்கிகளும் வட்டி குறைப்பை அறிவிக்கத் துவங்கியுள்ளன. இருப்பினும், இந்திய ரிசர்வ் வங்கி இதற்கு முன் வட்டி விகிதம் உயர்ந்த போது, தாமதமாகவே, அதிலும் குறைந்த அளவிலியே வட்டி விகிதத்தை உயர்த்தியது போலவே, இப்போதைய சூழலில் வட்டி விகித குறைப்பிலும் இதே அணுகுமுறையை பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கி, ரெப்போ விகிதம் 6.5 சதவீதம் என தொடரும் என்று அறிவித்துள்ளது பணவீக்க கட்டுப்பாட்டுக்கு நல்ல செய்தியாக பார்க்கப்படுகிறது. பணவீக்கம் கட்டுக்குள் இருந்தால், வரும் மாதங்களில் வட்டி குறைப்பு நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க மத்திய வங்கி நவம்பர் மாதத்தில் மேலும் ஒரு வட்டி குறைப்பை அறிவிக்க வாய்ப்புள்ளது. அப்போது ரிசர்வ் வங்கியும் வட்டி குறைப்பை அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்படலாம் என, வல்லுனர்கள் கருதுகின்றனர். டிசம்பர் மாத வாக்கில் வட்டி விகித போக்கு மாறலாம் என்கின்றனர்.

முதலீடு முடிவு



டிசம்பரில் மட்டும் அல்ல, அதன் பிறகும் வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்பிருப்பதாகவே கருதப்படுகிறது. உணவு பணவீக்கம் மிதமானால், அடுத்த ஆண்டு துவக்கத்தில், 50 அடிப்படை புள்ளிகள் வட்டி குறைப்பு நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சீன பொருளாதார சூழல் மேம்படுவதற்கான ஊக்கமளிப்பும் சவாலான அம்சமாக உருவாகிஉள்ளதாக கருதப்படுகிறது.

வட்டி விகிதம் குறைய வாய்ப்பு உள்ள நிலையில், தற்போதைய வட்டி விகிதத்தில் வைப்பு நிதி முதலீடு மேற்கொள்ள இது ஏற்ற தருணமாக கருதப்படுகிறது. வட்டி விகிதம் உச்சத்தை தொட்டு உள்ளதாகவும், இனி குறையவே வாய்ப்பு என்றும் வல்லுனர்கள் பரவலாக கருதுகின்றனர்.

வட்டி விகிதம் குறையத்துவங்கும் போது குறுகிய மற்றும் நடுத்தர கால அளவு வைப்பு நிதி மீது முதலில் தாக்கம் செலுத்தும்.

எனவே, தற்போதைய நிலையில் வைப்பு நிதி முதலீடு மேற்கொள்வது சிறந்த வட்டி விகிதத்தில் முதலீடு செய்யும் வாய்ப்பை அளிக்கும். உபரி பணம் கையில் வைத்துள்ளவர்கள் வைப்பு நிதியில் முதலீடு செய்யலாம். குறுகிய கால அளவில் முதலீடு எனில் உடனடியாக செயல்படுவது நல்லது என்கின்றனர்.

Advertisement