மஹா கும்பமேளாவில் பங்கேற்க அடையாள அட்டை கட்டாயம்

லக்னோ: உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில், வரும் ஜனவரியில் நடக்கும் மஹா கும்பமேளாவில் பங்கேற்கும் மதத் தலைவர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிவது கட்டாயமாக்கப்பட உள்ளது. சனாதனிகள் அல்லாதோர் உணவு கடைகள் வைக்க தடை விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பிரயாக்ராஜில், வரும் ஜன., 13 முதல் 26ம் தேதி வரை மஹா கும்பமேளா நடக்க உள்ளது.

முக்கிய முடிவுகள்



கங்கை, யமுனை, சரஸ்வதி கூடும் பகுதியில் நடக்கும் கும்பமேளாவில் இந்தாண்டு, 40 கோடி பேர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை மாநில அரசு செய்து வருகிறது.

இந்நிலையில், ஏ.பி.ஏ.பி., எனப்படும் அகில பாரதிய அகாரா பரிஷத் எனப்படும் 13 மடங்களின் கூட்டமைப்பு, கும்பமேளாவை நடத்துவது தொடர்பாக விரிவான ஆலோசனையை நேற்று நடத்தியது. அதன் தலைவர் மஹந்த் ரவீந்திர பூரி தலைமையில் நடந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து கூட்டமைப்பு கூறியுள்ளதாவது:

மஹா கும்பமேளாவில் பங்கேற்கும், சன்யாசிகள், மடாதிபதிகள் உள்ளிட்டோர், தகுந்த அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இதற்கான அடையாள அட்டைகளை அந்தந்த மடங்கள் வழங்கலாம்.

போலி சாமியார்கள் நுழைவதையும், கும்பமேளாவில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கவும் இதை அறிமுகம் செய்ய உள்ளோம்.

சில நாடுகளில் போர் நடந்து வருகிறது. இதைத் தவிர, சனாதன தர்மத்துக்கு எதிராக சிலர் பிரசாரம் செய்து வருகின்றனர். அதனால், பாதுகாப்பு கருதி, அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட உள்ளது. மேலும், தங்கள் மடங்கள் சார்பில் யார் யார் பங்கேற்பர் என்ற பட்டியலை, மாவட்ட நிர்வாகத்திடம் வழங்க வேண்டும்.

கும்பமேளா தொடர்பான சில நிகழ்வுகளுக்கு உருது மொழியில் பெயர் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை மாற்ற மாநில அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.

இறைச்சி விற்பனை



அதுபோல, சனாதனிகள் அல்லாதோர், மேளா நடக்கும் இடங்களில் உணவு விடுதிகள் உள்ளிட்டவை அமைக்க அனுமதிக்கக் கூடாது என்றும் பரிந்துரை செய்துள்ளோம். கும்பமேளா காலத்தில், அதை சுற்றியுள்ள பகுதிகளில், மது மற்றும் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கவும் கோரியுள்ளோம்.

கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களும், சனாதன தர்மத்தை பின்பற்றுவோர் நடத்தும் உணவு விடுதிகளிலேயே சாப்பிடுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த கூட்டமைப்பு கூறியுள்ளது.

Advertisement