வளர்ச்சியை வேகப்படுத்தும் கதிசக்தி: பிரதமர் பெருமிதம்

புதுடில்லி: 'வளர்ச்சியடைந்த பாரதம் என்ற கனவை நனவாக்கும் நம் முயற்சியை துரிதமாக்க, கதிசக்தி திட்டம் உதவுகிறது' என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

நம் நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக கடந்த 2021-ல் கதிசக்தி திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதன்படி ரயில்வே, சாலை, துறைமுகங்கள் உள்ளிட்ட 16 அமைச்சகங்கள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.

புதிதாக அறிவிக்கப்படும் திட்டங்கள் குறித்த நேரத்தில் நிறைவு பெறாமல் திட்டச் செலவு அதிகரிப்பது, நாட்டின் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், கதிசக்தி திட்டத்தின் கீழ் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, திட்டப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பிரதமரின் கதிசக்தி திட்டத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா, டில்லியில் நேற்று நடந்தது.

இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றதுடன், அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தன் பாராட்டுகளை தெரிவித்தார்.

முன்னதாக, சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளதாவது:

நம் நாட்டில் வளர்ச்சி பணிகளை வேகப்படுத்தும் நோக்கில் பிரதமரின் கதிசக்தி திட்டம் துவங்கப்பட்டது. பல்வேறு அமைச்சகங்களை ஒருங்கிணைக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இவை, நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்துவதுடன், முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல பெரிதும் உதவுகின்றன; பலருக்கும் வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி தருகிறது.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement