பங்கு பரிவர்த்தனை வரி வசூல் 6 மாதங்களில் ரூ.31,000 கோடி அதிக வர்த்தகம், வரி உயர்வு காரணம்

புதுடில்லி:நடப்பு நிதியாண்டில் இதுவரை, எஸ்.டி.டி., எனப்படும் பங்கு பரிவர்த்தனை வரி, கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 87 சதவீதம் அதிகரித்துள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டான 2024 - 25ல் பங்கு பரிவர்த்தனை வரியாக, 37,000 கோடி ரூபாய் வசூலாகும் என, மத்திய அரசு கணக்கிட்டுள்ளது. அதில், ஏப்ரல் முதல் அக்., 10 வரை, 30,630 கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இது மொத்த கணிப்பில், 83 சதவீதமாகும்.

கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், பங்கு பரிவர்த்தனை வரி வசூல் 16,373 கோடி ரூபாயாக இருந்தது. அதோடு ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டில் 87 சதவீதம் கூடுதலாக வசூலாகியுள்ளது. பட்ஜெட் எதிர்பார்ப்பில் இது, நான்கில் மூன்று பங்கை எட்டியதாக தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

பங்குச் சந்தைகள் தொடர்ந்து உயர்ந்து வந்தது மட்டுமின்றி, அதிக எண்ணிக்கையிலான பங்கு வர்த்தகம் நடைபெற்றதும் பங்கு பரிவர்த்தனை வரி வசூல் அதிகரிக்க காரணம். ப்யூச்சர் அண்டு ஆப்ஷன்ஸ் முறையிலான பங்கு வர்த்தகத்துக்கு முறையே, வரி 0.02 மற்றும் 0.10 என கடந்த பட்ஜெட்டில் அதிகரிக்கப்பட்டதும், வரி வசூல் உயரக் காரணமானது.

Advertisement