கரும்பு சாகுபடி பரப்பு அதிகரிப்பு சர்க்கரை ஆலைகளின் சிக்கல் நீங்கியது

சென்னை:தமிழகத்தில் கரும்பு சாகுபடி பரப்பு, 3.80 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளதால், சர்க்கரை உற்பத்திக்கான சிக்கல் நீங்கியுள்ளது.

கள்ளக்குறிச்சி, ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார், நாமக்கல், சேலம், அரியலுார், திருவள்ளூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் கரும்பு சாகுபடி அதிகளவில் நடந்து வருகிறது.

இதனை மையமாக வைத்து 16 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 22 தனியார் சர்க்கரை ஆலைகள் தமிழகத்தில் இயங்கி வந்தன.

இம்மாவட்டங்களில், 2020ம் ஆண்டுக்கு முன்புவரை, 5 லட்சம் ஏக்கருக்கு மேல் கரும்பு சாகுபடி நடந்தது. மத்திய, மாநில அரசுகள் நிர்ணயம் செய்யும் கரும்பு கொள்முதல் விலையை, சர்க்கரை ஆலைகள் வழங்கவில்லை என புகார்கள் எழுந்தன.

இதனால், கரும்பு நிலுவைத்தொகை 2,000 கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்தது. இதுனால், விரக்தி அடைந்த கரும்பு விவசாயிகள், மாற்றுப்பயிர்கள் சாகுபடியில் கவனம் செலுத்தத் துவங்கினர்.

இதனால், சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு கிடைக்காமல் உற்பத்தி முடங்கியது. கடந்தாண்டு, 2.22 லட்சம் ஏக்கரில் மட்டுமே கரும்பு சாகுபடி நடந்தது. இதனால், 12 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 16 தனியார் என, 30 சர்க்கரை ஆலைகள் மட்டுமே இயங்கின.

இதேநிலை தொடர்ந்தால், மேலும் பல ஆலைகள் மூடப்பட்டு, சர்க்கரை உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டது.

இதையடுத்து, கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் வேளாண்துறை ஈடுபட்டது. சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை, மானியம் உள்ளிட்ட உதவிகள் மத்திய, மாநில அரசு திட்டங்கள் வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன.

இதனால், கரும்பு சாகுபடி பரப்பு, 3.80 லட்சம் ஏக்கராக நடப்பாண்டு அதிகரித்துள்ளது. இதன் வாயிலாக, சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு தட்டுப்பாடு நீங்கியுள்ளது.

Advertisement