குலசை, திருநெல்வேலி தசரா விழா நிறைவு

தூத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் அருகே குலசேகரப்பட்டினம் தசரா விழாவில் நேற்று முன்தினம் இரவு சூரசம்ஹாரம் நடந்ததையடுத்து நேற்று பக்தர்கள் விரதத்தை நிறைவு செய்தனர்.

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா அக்., 3 கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று அதிகாலை 12:00 மணிக்கு முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் சிதம்பரேஸ்வரர் கோயில் முன் கடற்கரையில் சூரனை வதம் செய்தார். நேற்று காலையில் அம்மன் பூஞ்சப்பரத்தில் வீதி உலா வந்தார். மாலை 4:00 மணிக்கு கோயில் வந்து சேர்ந்தார். கைகளில் காப்பு கட்டி வேடம் அணிந்து விரதம் இருந்த பக்தர்கள் நேற்று மாலை விரதத்தை முடித்துக் கொண்டனர். இன்று(அக்., 14) மதியம் 12:00 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் தசரா விழா நிறைவு பெறுகிறது.

திருநெல்வேலியில் ஆயிரத்தம்மன், பேராத்து செல்வி அம்மன், முத்தாரம்மன், உச்சினி மாகாளியம்மன் என 12 அம்மன் கோயில்களில் இருந்து கிளம்பிய சப்பரங்கள் நேற்று காலை தெற்கு பஜார் ராமசாமி கோயில் திடலில் வரிசையாக நின்று பக்தர்களுக்கு அருள்பாலித்தன. இரவில் சமாதான பகுதியில் சூரசம்ஹாரம் நடந்தது.

Advertisement