அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுனர்களாக இளங்கலை, முதுகலை பார்மஸி பட்டதாரிகள் கேள்விக்குறியாகும் டிப்ளமோ முடித்தவர்கள் எதிர்காலம்

விருதுநகர்: தமிழக அரசு மருத்துவமனைகளில் உள்ள மருந்தாளுனர் பணியிடத்திற்கு டிப்ளமோ தகுதியாக உள்ளது. ஆனால் இளங்கலை, முதுகலை பட்டதாரிகள் 90 சதவீதம் பணிகளில் இருப்பதால் டிப்ளமோ முடித்த 60 ஆயிரம் பேரின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகள், மாவட்ட தலைமை, தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருந்தாளுனர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இரண்டு ஆண்டுகள் டிப்ளமோ பயிற்சி முடித்திருந்தால் போதும். எம்.ஆர்.பி., மூலம் தேர்வு நடத்தப்பட்டு தகுதியான நபர்கள் மட்டுமே பணியிடங்களில் நிரப்பப்படுகின்றனர்.

இதில் இளங்கலை, முதுகலை பார்மசி முடித்தவர்களும் தேர்விற்கு விண்ணப்பிப்பதால் டிப்ளமோ முடித்தவர்கள், அவர்களுடன் போட்டி போட்டு தேர்வு எழுத முடியாமல் தோல்வி அடைகின்றனர். மேலும் தற்போது மொத்தமுள்ள 2766 மருந்தாளுனர்கள் பணியிடங்களில் 90 சதவீதம் பட்டப்படிப்பு, மேற்படிப்பு முடித்தவர்கள் உள்ளனர்.

இங்குள்ள 100 தனியார் கல்லுாரிகளில் இருந்து ஓராண்டிற்கு ஒரு கல்லுாரிக்கு 50 என 5000 மாணவர்கள் டிப்ளமோ பார்மசி முடித்து வெளியே வருகின்றனர். இவர்களால் அரசு வேலைக்கு செல்ல முடியாமல் லட்சக்கணக்கில் செலவழித்து படித்து தனியார் மருந்தகங்களில் மாதம் ரூ. 8 ஆயிரம் சம்பளத்திற்கு பணிபுரியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 1989 முதல் 2024 வரை டிப்ளமோ பார்மசி முடித்த 60 ஆயிரம் பேர் வேலையின்றி கிடைத்த வேலைகளை செய்து வருகின்றனர். இதில் பலரும் மாற்றுத்துறைகளுக்கு சென்று விட்டனர். மேலும் மருந்தகங்கள் வைக்க தகுதி இருந்தும் பொருளாதார வசதி இல்லாததால் அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடும் நிலையில் உள்ளனர்.

அரசு மருந்தாளுனர்கள் சங்கத்தினர் கூறியதாவது: புதிதாக எம்.ஆர்.பி., மூலம் 1383 மருந்தாளுனர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டது. இதில் 95 சதவீதம் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் பணிக்கு வந்துள்ளனர். தமிழக அரசு எங்களுக்கு திறமையான ஆட்கள் மட்டுமே வேண்டும் என தெளிவாக கூறிவிட்டது.

ஆனால் தனியார் கல்லுாரிகள் அரசு வேலை கிடைக்கும் என டிப்ளமோ பார்மசி கல்விக் கட்டணமாக மாணவர்களிடம் அதிக தொகை பெறுகின்றன. ஒரு பணியிடத்திற்கு அரசு நிர்ணயித்த தகுதியை விட கூடுதல் தகுதிகள் பெற்றவர்கள் அப்பணியை பெறுவது அரசின் எல்லா துறைகளிலும் ஏற்பட்டுள்ளது என்றார்.

Advertisement