சிகர் லைட்டர்கள், உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

சிவகாசி: சிகர் லைட்டர்கள், உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிகர் லைட்டர்களால் தீப்பெட்டி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு சிவகாசி, சாத்துார் பகுதி தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டன. சிகர் லைட்டர்களுக்கு தடை விதிக்கும்படி தீப்பெட்டி தொழிலாளர்கள், உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

2023 ஜூலையில் ரூ.20க்கும் குறைவான பிளாஸ்டிக் மலிவு விலை சிகர் லைட்டர்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதனால் தீப்பெட்டி தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் சீனாவில் இருந்த சிகர் லைட்டர் உதிரி பாகங்களை இறக்குமதி செய்து, இந்தியாவில் தயாரித்து மலிவு விலையில் மீண்டும் சந்தையில் சிகர் லைட்டர்கள் விற்பனைக்கு வந்ததால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிகர் லைட்டர் உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

நேற்று மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சகத்தின் வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் அனைத்து வகை சிகர் லைட்டர்கள் மற்றும் எரிவாயு நிரப்பக்கூடிய, நிரப்ப முடியாத உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது. தடை உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கூறியதாவது: அத்தியாவசிய பொருள் இறக்குமதிக்கான இலவச பட்டியலில் சிகர் லைட்டர்கள் இருந்ததால், சுலபமாக இறக்குமதி செய்து சந்தையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்ததால் தீப்பெட்டி தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டது. 2023 ல் ரூ.20க்கும் கீழ் விலை குறைவான சிகர் லைட்டர்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. ஆனாலும் ரூ.20க்கு மேல் விலை கொண்ட லைட்டர்கள் இறக்குமதிக்கான இலவச பட்டியலில் தான் இருந்து வந்தது.

இதனால் உதிரி பாகங்களை இறக்குமதி செய்து, லைட்டர் தயாரித்து ரூ.10 க்கும் குறைவான விலையில் சந்தையில் விற்பனைக்கு வந்ததால் தீப்பெட்டி தொழில் பாதிக்கப்பட்டது. சமீபத்தில் விருதுநகர் வந்த மத்திய நிதியமமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் மனு அளித்தோம். சிகர் லைட்டர்கள், உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மத்திய நிதியமைச்சர் மற்றும் மத்திய அரசுக்கு நன்றி என்றனர்.

Advertisement