ரேஷனில் துவரம் பருப்பு தட்டுப்பாடு: தீபாவளிக்கு வினியோகம் சிரமம் தான்

3

தமிழகத்தில் மொத்தம் உள்ள, 2.21 கோடி ரேஷன் கார்டுகளில், 1.8 கோடி கார்டுதாரர்கள் துவரம் பருப்பு வாங்குகின்றனர். வெளி மார்க்கெட்டில் கிலோ, 200 ரூபாய் வரை விற்கும் துவரம் பருப்பு, ரேஷனில் கிலோ, 30 ரூபாய்க்கு வினியோகம் செய்யப்படுகிறது.

துவரம் பருப்பு வினியோகத்தில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை போக்கும் வகையில், 51,000 டன் துவரம் பருப்பு, மூன்று கட்டங்களாக கொள்முதல் செய்ய, தமிழக அரசு கடந்த மாதம் 16ம் தேதி ஆர்டர் கொடுத்துள்ளது.

அதில், முதல் கட்டமாக, வரும் 16ம் தேதிக்குள் 20,000 டன் துவரம் பருப்பை வழங்க வேண்டும்.

தமிழக அரசின் சிவில் சப்ளைஸ் நிறுவனத்துக்கு துவரம் பருப்பு சப்ளை செய்யும் ஒப்பந்தத்தை, விருதுநகரைச் சேர்ந்த சி.பி., புட்ஸ், வசுமதி டிரேடர்ஸ், மூர்த்தி டிரேடர்ஸ், சென்னை இன்டகரேட்டட் சர்வீஸ் பாய்ன்ட் பிரைவேட் லிமிடெட், மஹாராஷ்டிராவின் டாடா இன்டர்நேஷனல் லிமிடெட் ஆகிய, ஐந்து நிறுவனங்கள் எடுத்துள்ளன.

இவற்றில் விருதுநகர் வசுமதி டிரேடர்ஸ் மட்டும் ஒரு மாதத்தில், 1,200 டன்னும், மற்ற நான்கு நிறுவனங்கள் தலா, 4,700 டன் துவரம் பருப்பை, வரும் 16ம் தேதிக்குள் கொடுக்க வேண்டும்.

ஏற்கனவே, துவரம் பருப்பு இரு மாதங்களுக்கு ஒருமுறை ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது. தீபாவளி பண்டிகை வருவதால், துவரம் பருப்பின் தேவை அதிகரித்துள்ளது.

இதை கருத்தில் கொண்டு, மேற்கண்ட நிறுவனங்களிடம் இருந்து, 20,000 டன் துவரம்பருப்பை வரும் 16ம் தேதிக்குள் சப்ளை செய்ய ஆர்டர் கொடுத்தும், அவர்கள், கடந்த 10ம் தேதி வரை, வெறும் 3,473 மெட்ரிக் டன் மட்டுமே, அதாவது ஆர்டர் கொடுத்ததில், 17 சதவீதம் மட்டுமே சப்ளை செய்துள்ளனர்.

இன்னும், 83 சதவீதமான, 16,527 டன் சப்ளை செய்ய வேண்டியுள்ளது. இன்னும் மூன்று நாட்களில் அது சாத்தியம் இல்லை என்பதால், ரேஷன் கடைகளில் மீண்டும் துவரம் பருப்புக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

இதுகுறித்து, உணவு பொருள் வினியோக துறை வட்டாரங்கள் கூறுகையில், 'துவரம் பருப்பு கொள்முதலுக்கு அரசு அனுமதி அளித்துவிட்டது. ஆர்டரும் வழங்கப்பட்டு விட்டது.


ஒப்பந்தம் எடுத்த, ஐந்து நிறுவனங்களையும் விரட்டி, பருப்பு சப்ளை செய்யும் பணியை விரைவுபடுத்த, துறை அதிகாரிகள் முனைப்பு காட்டவில்லை. இதுவே பிரச்னைக்கு காரணம்' என்றன

- நமது நிருபர் -.

Advertisement