டாக்டர்களின் போராட்டம் முடிவுக்கு வருமா? மருத்துவ சங்கத்துடன் மம்தா அரசு இன்று மீண்டும் பேச்சு

கோல்கட்டா: இளம் டாக்டர்களின் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக, மருத்துவ சங்கத்தினருடன் மேற்கு வங்க அரசு இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட இருக்கிறது.


ஆர்.ஜி., கர் மருத்துவமனையில் இளம்பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் மீதான எதிர்ப்பு அலை மேற்கு வங்கத்தில் இன்னும் தீரவில்லை. மத்திய கோல்கட்டாவின் ஜன்பசாரில், கடந்த 5ம் தேதி மாலை முதல் ஜூனியர் டாக்டர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு சீனியர் டாக்டர்களும் ஆதரவு தெரிவித்து, ராஜினாமா கடிதத்தை மாநில அரசுக்கு அனுப்பி, நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.


டாக்டர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, டாக்டர்கள் குழுவுக்கு மேற்கு வங்க அரசின் தலைமை செயலாளர் மனோஜ் பண்ட் இன்று பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தார். மேலும், இளம் டாக்டர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடுமாறும் கோரிக்கை வைத்திருந்தார்.


இந்த நிலையில், இந்த அழைப்பை ஏற்று, தேசிய அளவில் நடைபெற்று வரும் போராட்டத்தை இன்று நிறுத்தி விட்டு, தங்களது கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த, அகில இந்திய மருத்துவ சங்கங்களின் பேரமைப்பு முடிவு செய்துள்ளது.


இது தொடர்பாக அவர் கூறும்போது, மேற்கு வங்க ஜூனியர் டாக்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளோம். இந்தப் பேச்சுவார்த்தையில் தங்களின் கோரிக்கை ஏற்காவிட்டால், நாளை (அக்., 15) முதல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம். அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சைகளை வழங்குவதில் எந்த பாதிப்பும் இருக்காது, எனக் கூறினார்.

Advertisement