ஏணியை கூரைக்கு போடதே,வானத்திற்கு போடு...


உன்னுடைய லட்சியம் மிக உயர்ந்ததாக இருக்கட்டும், உனக்கான எண்ணம் எனும் ஏணியை கூரைக்கு போடாதே, வானத்திற்கு போடு நிச்சயம் முன்னேறுவாய் என, மாணவர்களுக்கு நடிகர் சமுத்திரக்கனி அறிவுரை கூறினார்.

பணம் இல்லை என்ற காரணத்தினால் படிப்பு தடைபடக்கூடாது என்பதற்காக ஏழை எளிய மாணவர்களின் உயர்படிப்புக்கு வழிவகுக்கும் ஆனந்தம் கல்வி அறக்கட்டளையின் தன்னம்பிக்கை திருவிழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
Latest Tamil News
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நடிகர் சமுத்திரக்கனி பேசியதாவது..

படித்த படிப்பு எப்போதும் கைவிடாது,பள்ளியில் படிக்கும் போது நான் கணக்கு பாடத்தில் மட்டும் நுாற்றுக்கு நுாறு எடுப்பேன், கணக்கில் ரொம்ப ஸ்ட்ராங்.

சென்னையில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்த போது, ஒரு வீட்டின் அறையில் தங்கியிருந்தேன்,வாய்ப்பு கிடைக்காததால் கையில் காசில்லை,தங்கும் அறைக்கு வாடகை கொடுப்பதற்கும்,சாப்பிடுவதற்கும் மிகவும் சிரமம்.

வீட்டிற்கு வந்தால் ஒனர் வாடகை கேட்பாரே என்று பயந்து இரவு எல்லோரும் துாங்கிய பிறகு இரவு 11 மணிக்கு வருவேன் எல்லோரும் எழுந்திருப்பதற்கு முன் எழுந்து கிளம்பிவிடுவேன்.
Latest Tamil News
இந்நிலையில் ஒரு நாள் இரவு 11 மணிக்கு ஒனர் தனது பையனை கடுமையான வார்த்தைகளில் திட்டிக்கொண்டு இருந்தார், 'எல்லாத்திலும் மார்க் வாங்கி என்னடா பிரயோசனம்? கணக்கில வீக்கா இருக்கியேடா!' என்று சத்தம் போட்டார்.

எனக்கு மூளைக்குள் பளிச்சென ஒரு 'பல்ப்' எரிந்தது,ஒனரைப் பார்த்து, 'நான் உங்க பையனுக்கு கணக்குப்பாடம் எடுக்கட்டுமா?' என்று கேட்டேன்.,'ஸ்கூல் வாத்தியாராலேயே முடியல நீ என்ன செய்யப்போற, இருந்தாலும் முயற்சி செய்' என்று சொல்லவிட்டார், நானும் முயற்சித்தேன் அது நல்ல பலன் தந்தது, ஒனர் பையன் பாஸ் மார்க்கும், பின் கூடுதல் மார்க்கும் வாங்கினான்.

ஒனருக்கு ரொம்ப சந்தோஷம் ரொம்ப நாளாக வாடகை வாங்கததுடன், 'சாப்பிட்டியப்பா' என்று கேட்டு வீட்டு சாப்பாடும் கொடுத்தார்.இது கல்விக்கு கிடைத்த மரியாதை.

நடிக்க வந்த நான் வாய்ப்பு கேட்டுப் போன இடத்தில் சினிமாவில் உதவி கதாசிரியராக வாய்ப்பு கிடைத்தது சரி முதலில் சாப்பாட்டுக்கு வழி பிறக்கட்டும் என்று சேர்ந்து அதில் திறமையைக்காட்ட ஒரே நேரத்தில் மூன்று மெகா சீரியல்களுக்கு கதை வசனம் எழுதும் அளவிற்கு உயர்ந்தேன்.

அப்போது என் நண்பர் சசிக்குமார் வந்து, நீ நடிக்கத்தானே வந்தாய் எதுக்கு எழுதிட்டு இருக்கே என்று கேட்டு சுப்பிரமணியபுரம் படத்தில் நடிக்க அழைத்தார் ,அப்போது என் மனைவி ஏங்க இப்பவே நல்லாத்தானே போய்ட்டு இருக்கு இனி எதுக்கு நடிப்பு அது இது எல்லாம் என்றாள்.

இல்லை நான் ஆசைப்பட்டபடி நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கு அதை விடக்கூடாது என்று சொல்லி சகலத்தையும் உதறிவிட்டு நடிக்கப் போய்விட்டேன்.

நான் அப்படி உதறுவதற்கு காரணம் எனது வாழ்க்கையை எவ்வித வருமானமும் இல்லாமல் நகர்த்தி செல்வதற்கு உள்ள பக்குவத்தில் இருந்தேன், எளிமையே வலிமை என்பதில் உறுதியாக இருந்தேன்.கமிட்மெண்ட் என்ற சங்கிலிகள் எனது கால்களை கட்டிப்போட நான் அனுமதிக்கவில்லை.

பிறகு சுப்பிரமணியபுரம் படத்தில் நடித்தேன் அதன்பிறகு வாழ்க்கை திசை திரும்பி நான் விரும்பியபடி சென்று கொண்டு இருக்கிறது.

இதுதான் நான் மாணவர்களுக்கு சொல்லும் செய்தியும் கூட

உங்கள் லட்சியம் மிக உயர்ந்த லட்சியமாக இருக்கட்டும் அந்த லட்சியத்தை அடைவதில் விடாப்பிடியாக இருங்கள் ஏணியை எப்போதுமே கூரைக்கு போடாதீர்கள் வானத்திற்கு போடுங்கள் வாழ்த்துக்கள் என்றளவில் பேசிமுடித்தார்.

மாணவர்கள் கைதட்டலால் அரங்கம் அதிர்ந்தது.

-எல்.முருகராஜ்

Advertisement