இலகு ரக வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் இல்லை; மஹாராஷ்டிரா அரசு தீபாவளி பரிசு!

9

மும்பை: மும்பையில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் இலகு ரக வாகனங்களுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படாது என்று மஹாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.


மஹாராஷ்டிரா சாலை மேம்பாட்டு கழகம் சார்பில், போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு மும்பையில் 55 மேம்பாலங்கள் கட்டப்பட்டது. இந்தப் பாலங்கள் கட்டப்பட்டதற்கான செலவை ஈடுசெய்யும் விதமாக, கடந்த 2002ம் மும்பையில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில், மும்பையில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் இலகு ரக வாகனங்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க மஹாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.


இது தொடர்பாக அம்மாநில பொதுத்துறை அமைச்சர் தாதாஜி தகடு புசே கூறியதாவது: மும்பைக்குள் நுழையும் போது, தஹிசார், அனந்த் நகர், வைஷாலி, ஐரோலி, முலுந்த் உள்ளிட்ட 5 இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வரும் 2026ம் ஆண்டு வரையில் ரூ.45 மற்றும் ரூ.75 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.


இந்த சுங்கச்சாவடிகள் வழியாக 3.5 லட்சம் வாகனங்கள் வந்து செல்கின்றன. சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனரக வாகனங்களும், 2.80 லட்சம் இலகுரக வாகனங்களும் கடந்து செல்கின்றன.


இந்த நிலையில், வாகன ஓட்டிகளின் நலன் கருதி, இன்று நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு இலகு ரக வாகனங்களுக்கு இனி சுங்கக்கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று அரசு முடிவு செய்துள்ளது. பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, எனக் கூறினார்.


மஹாராஷ்டிரா அரசின் பதவி காலம் அடுத்த மாதம் நவம்பர் 26ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அடுத்த வாரத்தில் சட்டசபை தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், சிவசேனா - பா.ஜ., கூட்டணி அரசு, சுங்கக்கட்டணம் விலக்கு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement