கலெக்டர் அலுவலக குண்டு வெடிப்பு: மதுரையை சேர்ந்த மூவர் குற்றவாளிகள்
கொல்லம் : 'கேரளா மாநிலம் கொல்லம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் மதுரையை சேர்ந்த, 3 பேர் குற்றவாளிகள்,' என, தீர்ப்பு வழங்கப்பட்டது.
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நீதிமன்றம் அருகே கடந்த, 2016 ஜூன் 15ல் குண்டு வெடிப்பு நடந்தது. கடந்த, 2014 ஜூன், 15ல் குஜராத்தில் இஷ்ரத் ஷாஜகான் மற்றும் மூன்று பேர் என் கவுண்டரில் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில், இந்த குண்டு வெடிப்பு நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.
இதுகுறித்து, கொல்லம் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
நேற்று முன்தினம் நடந்த விசாரணை முடிவில், 'பயங்கரவாத இயக்கமான 'பேஸ் மூவ்மென்ட்' இயக்கத்தின் செயல்பாட்டாளர்களாக இருந்த அப்பாஸ் அலி,31, முதல் குற்றவாளி; சாம்சூன் கரீம்ராஜா இரண்டாம் குற்றவாளி; தாவூத் சுலைமான், 27 மூன்றாவது குற்றவாளி,' என, நீதிபதி கோபகுமார் தீர்ப்பளித்தார். மூவரும் தமிழகத்தின் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
இந்த வழக்கில் நான்காவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சம்சுதீன்,28, போதிய ஆதாரம் இல்லாததால் விடுதலை செய்யப்பட்டார். குற்றவாளிகளான மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.