ஊராட்சிகளில் உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டியை துாய்மை செய்ய கோரிக்கை வைரஸ் காய்ச்சலால் மக்கள் பாதிப்பு
திருப்புல்லாணி, : திருப்புல்லாணி மற்றும் கடலாடி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 93 ஊராட்சிகளிலும் முறையாக குடிநீர் மேல்நிலைத் தொட்டியை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஊராட்சிகளில் காவிரி குடிநீர் மற்றும் உள்ளூரில் கிடைக்கக்கூடிய தண்ணீரைக் கொண்டு மேல்நிலைத் தொட்டிகளில் குடிநீர் ஏற்றப்படுகிறது. தற்போது பருவ மழை துவங்கியுள்ளதால் பெருவாரியான குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளில் குளோரினேசன் செய்தும் சுற்றுப்புறத்தை ப்ளீச்சிங் பவுடர் தெளித்தும் சுகாதாரமாக வைக்க வேண்டும்.
ஊராட்சிகளில் உள்ள கழிவு நீர் வழிந்து ஓடுவதை தவிர்க்க உடனடியாக ஊராட்சி நிர்வாகத்தினர் துாய்மைப் பணியை மேற்கொள்ள வேண்டும். குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளில் பல மாதங்களாக சுத்தம் செய்யாமல் தொட்டியின் அடியில் உள்ள பாசி மற்றும் கழிவுகளை அகற்றி துாய்மையாக வைத்திருக்க வேண்டும்.
தற்போது அதிகளவு வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் பொதுமக்கள் பாதிப்பிற்ள்ளாகி வருகின்றனர். இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அதிகளவு நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகத்துடன் ஒன்றிணைந்து மருத்துவத்துறை, சுகாதாரத்துறையினர் உரிய நடவடிக்கைகளை எடுத்து நோய் ஏற்படுத்தும் காரணிகளை கண்டறிந்து அதை முற்றிலும் தடுக்க வேண்டும் என்றனர்.