விழுப்புரத்தில் துணை முதல்வர் இன்று... திக்...திக்... தயார் நிலையில் துறை அதிகாரிகள்
விழுப்புரம் விழுப்புரத்தில் இன்று 6ம் தேதி மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் துணை முதல்வர் உதயநிதி தலைமையில் நடைபெற உள்ளது. இதையொட்டி, அனைத்து துறை அதிகாரிகள் பணி தொடர்பான கோப்புகளை கவனமாக தயார் செய்து ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று 6ம் தேதி காலை 11:00 மணிக்கு மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. இதில், துணை முதல்வர் உதயநிதி வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தும், பணி நிலவரங்கள் பற்றியும் கேட்டறிகிறார்.
இதையொட்டி, ஊரக வளர்ச்சி, பொதுப்பணி, சுகாதாரம், பள்ளிக்கல்வி உட்பட பல்வேறு அரசு துறைகளில் நடைபெற்றுள்ள அரசின் வளர்ச்சி பணிகள் குறித்தும், தற்போதுள்ள பணிகளின் நிலவரங்கள் குறித்தும் அதற்கான கோப்புகளை தயார் செய்து, மாவட்ட நிர்வாகத்திடம் ஆய்வு கூட்டத்தில் வைப்பதற்கு ஒப்படைத்து விட வேண்டும் என தீவிர முனைப்போடு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதி பங்கேற்ற போது, கூட்டத்தில் வைத்த பணிகளுக்கான கோப்பிற்கும், அங்கு பணி உள்ள நிலை குறித்த விபரங்களுக்கும் சரியாக இல்லாததால், 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த நிலை இங்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அரசு அதிகாரிகள், அலுவலர்கள் பணிக்கான விபரங்களை சரியாக வழங்க வேண்டும் என்பதற்காக கவனமாக கோப்புகளை தயார் செய்துள்ளனர்.
ஆனால், மறுபுறத்தில் துணை முதல்வரின் ரகசிய அணியினர் சிலர், நேரடியாக மாவட்டத்தில் களத்தில் இறங்கி, துறை சார்ந்த பணிகள் எந்தளவு நடந்துள்ளது, தற்போது பணிகள் எந்தளவு உள்ளது என்ற விபரங்களை சேகரித்துள்ளனர்.
இந்த விபர முடிவுகளை அவர்கள் துணை முதல்வரிடம் நேரடியாக வழங்கியுள்ளதாக, ஆளுங்கட்சி விசுவாசிகள் சிலர் தெரிவிக்கின்றனர். இந்த கோப்புகளையும், அதிகாரிகள் வைத்துள்ள கோப்பு நிலவரங்களையும் வைத்துக் கொண்டு, துணை முதல்வர் உதயநிதி இன்று ஆய்வு செய்ய உள்ளார்.
இதனால், அதிகாரிகள், ஆய்வுக் கூட்டத்தை எவ்வித தடையின்றி கடந்து விட வேண்டும் என எண்ணி நேற்று முதல் தங்களின் இஷ்ட தெய்வத்தை நினைத்து கோப்புகளை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
துணை முதல்வரின் வருகையையொட்டி, விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் வெளிப்புற வளாகங்களில் வர்ணங்கள் தீட்டி, அழகாக்கும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.