பெண்ணாடம் கோவிலில் ரூ.98 லட்சத்தில் தேர் திருப்பணி: அமைச்சர் துவக்கி வைப்பு
பெண்ணாடம்: பெண்ணாடம் கோவில் அம்மன், விநாயகர் தேர் திருப்பணியை ரூ. 98.20 லட்சத்தில், அமைச்சர் கணேசன் துவக்கி வைத்தார்.
பெண்ணாடத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவில் கடந்த 2006ல் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிேஷகம் நடந்தது. 2018 ஏப்ரல் மாதம் 3ம் தேதியுடன் 12 ஆண்டுகள் நிறைவடைந்தது. அதன் பிறகு 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் கும்பாபிேஷகம் நடத்தாததால் கோபுரத்தில் செடி, கொடிகள் அதிகளவில் வளர்ந்து சிலைகள், சுவர்கள் சேதமடைந்து வலுவிழக்கும் அபாயம் ஏற்பட்டது.
பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, கடந்தாண்டு மே மாதம் பிரளயகாலேஸ்வரர் கோவில் திருப்பணிக்கு கோவில் நிதி ரூ.39.53 லட்சம் மற்றும் உபயதாரர் நிதி ரூ.43.91 லட்சம் என, மொத்தம் ரூ.83.44 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, திருப்பணியை அமைச்சர் கணேசன், தருமபுர ஆதீனம் திருபுவனம் கட்டளை விசாரணை சட்டநாத தம்பிரான் சுவாமிகள் துவக்கி வைத்தனர். திருப்பணியும் முடியும் நிலையில் உள்ளது.
இக்கோவிலுக்கு சொந்தமாக மூலவர், அம்மன், விநாயகர் ஆகிய 3 தேர்கள் இருந்தன. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் 3 தேர்களும் மர்மமான முறையில் எரிந்து சாம்பலானது. இதனால் பல ஆண்டுகள் தேர் திருவிழா நிறுத்தப்பட்டது. பக்தர்கள் கோரிக்கையை ஏற்று, கடந்த 2010ல் மூலவர் தேர் மட்டும் புதிதாக அமைத்து, விழா நடந்தது.
இந்நிலையில், கிராம மக்கள், பக்தர்கள் அம்மன் தேர் மற்றும் விநாயகர் தேர் அமைக்க கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து கடந்த 5 மாதங்களுக்கு முன் அம்மன் தேருக்கு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பொதுநல நிதி 28 லட்சத்து 30 ஆயிரம், கோவில் நிதி 28 லட்சத்து 30 ஆயிரம்; விநாயகர் தேருக்கு ஆணையர் பொதுநல நிதி 25 லட்சம், கோவில் நிதி 16 லட்சத்து 60 ஆயிரம் என, 98 லட்சத்து 20 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இத்திருப்பணியை அமைச்சர் கணேசன் துவக்கி வைத்தார். அறநிலையத்துறை ஆய்வாளர் தமிழ்ச்செல்வி, கோவில் செயல் அலுவலர் மகாதேவி உட்பட பலர் உடனிருந்தனர்.